ஸ்ரீ தியா
January 24, 2025 at 07:00 AM
வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவது, நமக்கு செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி போன்ற நல்ல விளைவுகளைத் தரும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இந்த வெள்ளிக்கிழமைகளில், ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கு தனி சிறப்பு உண்டு. அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதுபோல தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும் மிகவும் முக்கியமானவை. இந்த தை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம் குடும்பத்தில் செல்வ வளம் பெருகி, நம் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஸ்ரீ தியா பதிவில் தை வெள்ளியின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விரிவாக காண்போம். அம்மன் வழிபாட்டின் சிறப்பு அம்மன் ஆலயங்களுக்கு சென்று அன்னையை வழிபடுவது நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். அம்மன் கோவிலுக்கு சென்று சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால், நம் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் வெற்றிபெறும். அம்மன் அருளால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வார்கள். கடன் தொல்லையில் சிக்கியிருப்பவர்கள் அம்மனை வழிபட்டால், அவர்களது கடன் தொல்லைகள் விரைவில் நீங்கி நிம்மதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதால், நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி, நம் வாழ்வில் நல்லதுகள் நிகழும். மேலும், திருமணம் போன்ற மங்கள காரியங்கள் விரைவில் நடக்க அம்மன் அருள் கிடைக்கும். தை வெள்ளி விரதத்தின் சிறப்பு தை மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வரலட்சுமி அம்மனை வழிபடும் நாளாகும். இந்த நாளில் விரதமிருந்து, அம்மனை வழிபடுவதால் நம் வாழ்வில் செல்வம், நலம், வளம் பெருகும் என்பது ஐதீகம். வழிபாட்டு முறை: அதிகாலை எழுந்து தூய்மை: விடியற்காலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி, லட்சுமி தேவியை வரவேற்கும் வகையில் அலங்காரம் செய்ய வேண்டும். கோலமிடுதல்: வீட்டு வாசலில், குறிப்பாக பூஜை அறை வாசலில், தாமரைக்கோலம் அல்லது சுவஸ்திகம் போன்ற மங்களகரமான கோலங்களை இட வேண்டும். கோல மாவினால் 'திருமகளே வருக! செல்வ வளம் தருக!' என்று எழுதலாம். பூஜை அறை அலங்காரம்: பூஜை அறையில் விநாயகர் மற்றும் வரலட்சுமி அம்மனின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும். படத்தின் முன்பு நெல் பரப்பி, அதன் மேல் அரிசி பரப்பி வைக்க வேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய், பழங்கள் போன்றவற்றை அழகாக அடுக்கி வைக்கலாம். நைவேத்தியம்: தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற இனிப்பு வகைகள் வைப்பது மிகவும் சிறப்பானது. மந்திரங்கள்: ‘லட்சுமி மந்திரம்’, ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ போன்ற மந்திரங்களை ஜெபிக்கலாம். தீபம் ஏற்றி வழிபாடு: நெய் விளக்கு ஏற்றி, தூபம் காட்டி வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை என்பதால், வெள்ளி விளக்கு ஏற்றினால் மேலும் சிறப்பாக இருக்கும்.
🙏 ❤️ 👍 🔥 22

Comments