Sri Ramanasramam
                                
                            
                            
                    
                                
                                
                                February 17, 2025 at 05:55 AM
                               
                            
                        
                            *சுந்தரம் ஐயர் ஆராதனை*
பகவான் ரமண மகரிஷிகளின் தந்தையார், சுந்தரம் ஐயர் அவர்களின் ஆராதனை தினம் இன்று (17/02/2025 திங்கட்கிழமை) தாயார் சமாதியில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு ஆராதனை அனுசரிக்கப்பட்டது. 
*** *** ***
“அது ஓரு மழைக்காலம். தந்தை சுந்தரம் ஐயர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருக்கையில் சிறுவன் வேங்கடராமனும் அவன் நண்பர்களும் வீட்டுப் பரண் மேலேறி அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகிதக் கட்டுக்களைப் பிரித்துத் தங்கள் விருப்பப்படி கப்பல்களைச் செய்து தண்ணீரில் மிதக்கவிட்டுக் களிப்படைந்தனர். 
இல்லம் திரும்பிய தந்தை, வழக்கு விவரங்கள் அடங்கிய காகிதங்கள் கலைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு இவற்றையெல்லாம் செய்தது வேங்கடராமனே என்றறிந்து மிகுந்த கோபத்துடன், அவன் சட்டையைக் கழற்றி, வீட்டை விட்டு வெளியே துரத்து என்று கூறினார். இதைச் செவிமடுத்த சிறுவன் அவ்விடத்தை விட்டுச் சிட்டென மறைந்தான். 
வேங்கடராமன் வீட்டிற்கு வராததைக் கண்டு அனைவரும் அவனைத் தேடினர். வீட்டிலும் அவன் நண்பர்கள் இல்லங்களிலும், ஆலயத்திலும் தேடினர். சிறுவனைக் காணவில்லை.  
திருமேனிநாதருக்கு உச்சிகால பூஜை முடிந்து அன்னை சகாயவல்லிக்கு அபிஷேக ஆராதனை செய்வதற்காகப் பட்டர் இறைவியின் கருவறைக்குள் நுழைந்தார். அங்கே சிலையைப் போன்ற ஒரு உருவம் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். விளக்கைத் தூண்டி யாரென்று நோக்க, அங்கு காணாமற்போன சிறுவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். 
வக்கீலுக்குத் தகவல் பறந்தது. சுந்தரம் அய்யர் ஆலயத்திற்கு விரைந்து சென்று தன் மகனைத் தோளின் மேல் தூக்கி வீட்டிற்குக் கொண்டு வந்தார். தந்தை கடிந்து கொள்ள சிறுவன் அதைப் பொறுக்காமல் எங்கேயும் சென்றிருக்கலாம். ஆயினும் முனிநாயகனாய்த் திகழப்போகும் அவன் உலகை ரக்ஷிக்கும் அன்னையை சரண் அடைந்தான்.”
பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? யாரைச் சரணடைய வேண்டும் என்று இதன்மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறாரோ?”
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🌹
                                        
                                    
                                        
                                            💚
                                        
                                    
                                    
                                        19