Thol.Thirumavalavan
February 16, 2025 at 05:54 PM
பெறுநர்:
----------------
மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை -9
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் நான்காவது கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துகள் :
1 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம்:
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்களின் வேலை அட்டைகளை ஒன்றிய அரசு ரத்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் 04.02.2025 வரை 77,193 தொழிலாளர்களின் வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. 2023-24 இல் 146106 பேரின் வேலை அட்டைகளும், 2022-23 இல் 128553 பேரின் வேலை அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் என்ன? இது குறித்துத் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்குத் தனது ஆட்சேபணையைத் தெரிவித்ததா என்பதை அறிய விரும்புகிறேன்.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் சொல்லப்பட்டாலும் சராசரியாக 30 முதல் 40 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகிறது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்காவது 100 நாட்கள் வேலை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களில் முனைப்போடு வேலை செய்கிறவர்கள் ( active workers) எஸ்சி பிரிவைs சேர்ந்தவர்கள் தாம். ஆனால் அவர்களுக்குப் போதுமான அளவு வேலை கொடுக்கப்படவில்லை.
எஸ்சி எஸ்டி பிரிவினர் கிராமப்புறங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளில் எவ்வளவு சதவீதம் உள்ளனரோ அந்த அளவுக்கு இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாகவே வேலை வழங்கப்படுகிறது. இது விவசாயக் கூலிகள் அல்லாதவர்களை இந்தத் திட்டத்தில் வேலை செய்பவர்களாக காட்டுவதால் ஏற்படும் சிக்கலாகும். இது பெருமளவில் இந்தத் திட்டத்தை தோல்வியுறச் செய்கிறது. எனவே எஸ்சி எஸ்டி பிரிவினர் இந்தத் திட்டத்தில் உரிய அளவில் உள்ளடக்கப்படுவதைத் ( inclusivity) தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேசிய வேலை உறுதிச் சட்டத்தின்படி பணித்தலப் பொறுப்பாளர்களில் எஸ் சி எஸ் டி பிரிவினர் உரிய அளவில் இடம்பெற வேண்டும். ஆனால் அந்த விதி பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் எஸ் சி பிரிவினரின் எரி கொட்டகை, காத்திருப்போர் கூடம் ஆகியவை பெரும்பாலான கிராமங்களில் இருப்பதில்லை. இதனால் தேவையற்ற சமூக முரண்பாடுகள் உருவாகி சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மாறுகின்றன. எனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எரி கொட்டகை, காத்திருப்போர் கூடம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் வேலை செய்வோருக்கு அந்த வாரத்திலேயே கூலி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
2 பிரதமர் வீடு கட்டும் திட்டம் ( PMAY) :
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் செலவிடப்படவில்லை எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் நகப்புறங்களில் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.
கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு யூனிட் காஸ்ட்டை உயர்த்த முடியாது என ஒன்றிய அரசு கூறிவிட்ட நிலையில் மாநில அரசே அதற்கான பங்களிப்பை உயர்த்தி 5 லட்சமாக வழங்குவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். மாநில அரசு செயல்படுத்தும் வீடு கட்டும் திட்டத்துக்கு 5 லட்சம் யூனிட் காஸ்ட்டாக இருக்கும் நிலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்குக் குறைவாகத் தருவது பயனாளிகளிடையே பாகுபாடு காட்டுவதாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
3 பிரதமர் கிராம சாலைகள் திட்டம் ( PMGSY) :
பிரதமர் கிராமப்புற சாலைகள் அமைக்கும் திட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்கள் சரியான சாலை இணைப்புகள் இல்லாமல் இப்போதும் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. ஏனவே, அவ்வாறு இருக்கும் கிராமங்களை இணைப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
4 சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை :
பல்வேறு வகையான புற்றுநோய்களின் காரணமாக தற்போது பெருமளவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் கருவாய்புற்று நோய், மார்பகப் புற்று நோய் ஆகியவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். அவற்றைக் கண்டறியும் கருவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இல்லை. அவற்றை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருவாய்புற்று நோயைத் தடுப்பதற்கு ஹெச்பிவி தடுப்பூசி சோதனை முறையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். அது எந்த அளவில் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். அந்தத் தடுப்பூசித் திட்டத்தை கருவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுக்கு விரிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
5 கல்வி உதவித் தொகை :
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கான வருமான வரம்பு சுமார் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 2.5 லட்சம் என்றும் ஓபிசி பிரிவினருக்கு 2 லட்சம் என்றும் இந்த வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான ( EWS) வருமான வரம்பு 8 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் அநீதியாகும். எனவே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கான வருமான வரம்பை ஓபிசி பிரிவினருக்கு 8 லட்சமாகவும், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 10 லட்சமாகவும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தப் போவதாகத் தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய நேரத்தில் 2025- 26 வரையில் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறுத்திவிட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு நுழைவுத் தேர்வு நடத்தி பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் நிறுத்தப்பட்டால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் உயர்கல்வி பெறுவது பகல் கனவாகிவிடும். எனவே இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தைத் தொடரச் செய்வதற்கும், உரிய நிதி ஒதுக்கப்படுவதற்கும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மாநில அரசு முதலில் அதன் பங்கான 40% ஐ விடுவிக்க வேண்டும், அதன் பின்னரே ஒன்றிய அரசு தனது பங்கை விடுவிக்கும் என்கிற தற்போதைய நடைமுறையால் பல மாணவர்கள் படிப்பைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே இதைச் சீர் செய்ய வேண்டும்.
6 பழங்குடியினர் நலன்- பி.எம்.ஜன்மன் திட்டம்
பழங்குடியினரில் மிகவும் நலிவடைந்த பிரிவினரைக் ( PVTG) கண்டறிந்து அவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு பி எம் ஜன்மன் திட்டம் ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப் படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள பழங்குடிகளில் தோடா, கோடா, குரும்பாஸ், இருளர், பணியன், காட்டுநாயக்கன் ஆகிய ஆறு சாதிகளை அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி சாதிகளாக (Particularly Vulnerable Tribal Groups ) அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. அந்த ஆறு சாதிகளில் ஒன்றாக இருக்கும் இருளர் சமூகத்தவர் நீலகிரி பகுதியில் மலைப் பிரதேசத்திலும் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சமவெளிகளிலும் வாழ்கின்றனர். பெரும்பாலான இருளர் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைகள் இல்லை. அதனால் பிஎம் ஜன்மன் திட்டத்தில் அவர்கள் வீடு பெற முடியவில்லை. அவர்களது குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. அவற்றைச் செய்து தர சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விடா முயற்சியால் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நரிக்குறவர் சாதியை
அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி சாதிகளில் (Particularly Vulnerable Tribal Groups ) ஒன்றாக சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பழங்குடியினரின் படிப்பறிவு விகிதத்துக்கும் பொதுப் பிரிவினரின் படிப்பறிவு விகிதத்துக்கும் இடையே சுமார் 25% இடைவெளி இருப்பதாக 2011 சென்சஸ் கூறுகிறது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் தேவை.
7 வேளாண்மை - உழவர் நலத்துறை
வேளாண்மை என்பது மாநில அதிகாரப் பட்டியலில் 14 ஆவதாக உள்ளது. என்றபோதிலும் ஒன்றிய அரசு தேவையில்லாமல் மாநில அதிகாரத்தில் நுழைந்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் அதற்கான நிதிச் சுமையை மாநில அரசு சுமக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி மானியம் வழங்க வேண்டுமெனவும் நாம் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் வேளாண் திட்டங்களின் இலக்கை எட்டுவதில் எஸ்சி, எஸ்டி பிரிவினரிடையே குறைந்த அளவே நிலம் இருப்பது ஒரு காரணமாக ( பக்கம் 80) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைவாக நிலம் வைத்திருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. நிலம் இல்லாத நிலையினால்தான் கிராமப் புறங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதிக அளவில் வன் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு நிலம் வழங்குவதற்கென தற்போது செயல்படுத்தப்படும் நன்னிலம் திட்டம் சிறப்பாக உள்ளது என்றபோதிலும் அதற்கு ஒதுக்கப்படும் நிதி போதவில்லை. எனவே அதற்கு நிதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
8 நிறுத்தப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும்:
ஒன்றிய அரசு இதுவரை நடைமுறைப்படுத்தி வந்த SAGY, PMAGY ஆகிய திட்டங்களை தற்போது நிறுத்திவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு கிராமத்தைத் தத்தெடுக்கும் திட்டத்தால் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் உருவாயின. அந்தத் திட்டத்துக்குத் தனியே நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள திட்டங்களை அந்த கிராம ஊராட்சியில் நடைமுறைப்படுத்துவதுதான் அந்தத் திட்டமாகும். அதை இப்போது ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது.
50% க்கு மேல் எஸ்சி மக்கள் வசிக்கும் ஊராட்சியைத் தெரிவு செய்து அதில் அடிப்படை வசதிகளைச் செய்து தரும் திட்டம் PMAGY ஆகும். அதுவும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் தொடர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அவ்வாறு தொடர்வதற்கு ஒன்றிய அரசு முன்வராவிட்டால் தமிழ்நாடு அரசே அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இவண்,
முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
👍
❤️
3