Doctor Farook Abdulla

3.2K subscribers

About Doctor Farook Abdulla

Medical facts, life style changes, Dietary aspects.

Similar Channels

Swipe to see more

Posts

Doctor Farook Abdulla
6/5/2025, 3:49:11 PM

கொரோனா தற்போதைய நிலை பீதி தேவையா? எச்சரிக்கை தேவையா? Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை இதே மே மாதம் அப்படியே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 நமது நாடு கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் டெல்ட்டா அலையைச் சந்தித்துக் கொண்டிருந்தது. இன்னும் நம்மை விட்டு அந்த கொடும் நினைவுகள் நீங்கியபாடில்லை. எனவே கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் மரணங்கள் நியாபகம் வருகின்றன லாக் டவுன் மற்றும் அது சார்ந்த தனிநபர் சுதந்திரத்தில் அத்துமீறல்கள் நியாபகம் வருகின்றன கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக நடந்த பொருளாதார முடக்கங்கள் என்று நமது மனதில் ரணங்கள் மட்டுமே நியாபகம் வருகின்றன. அதனால் கொரோனா என்ற பேச்சை எடுத்தாலே "பீதியும் கவலையும்" தான் வருகின்றது. இப்போது கொரோனா நிலைமை அத்தகைய பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா ? என்று கேட்டால் அறிவியல் பூர்வமாகவும் நிகழ் தகவுகளின் ஆதாரங்டளின் அடிப்படையிலும் இல்லை இல்லை இல்லை என்பதே பதில். கொரோனா வைரஸைப் பொருத்தவரை அது தன்னகத்தே சில பல உருமாற்றங்களை செய்து ஆறு முதல் பத்து மாதங்களுக்கு ஒருமுறை, தனக்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையும் போது பொதுமக்களில் பெரும்பான்மையினருக்கு தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குன்றும் போது ஒரு ரவுண்ட் வந்து செல்கிறது. இதைத்தான் நாம் அலை என்கிறோம். ஆனாலும் இப்போது நம்மை வருடும் கொரோனா அலை - பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதுவே மே 2021 இல் நம்மை தாக்கிய கொரோனா சுனாமி நம்மில் பலரை வாரி சுருட்டிச் சென்றது. இதற்குக் காரணம் தற்போது 2020 முதல் 2025 வரை நாம் பற்பல கொரோனா வைரஸின் முகங்களை பல அலைகளாக வருடந்தோறும் அடைந்து அதற்குரிய எதிர்ப்பு சக்தியை நம்மில் பெரும்பான்மையினர் பெற்றுள்ளோம். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் என்பி.1.8.1 (NB.1.8.1) என்ற இந்த உருமாற்ற திரிபு வகை உலகம் முழுவதும் கண்டறியப்படும் மாதிரிகளில் 10.7% என்ற இடத்தில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதன் ஆதி மூதாதை யாரென்று பார்த்தால் அது ஜேஎன்.1 திரிபு அதன் மூதாதை - ஓமைக்ரான் திரிபாகும் எனவே ஓமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த அதன் சந்ததி திரிபு வகைகளே தற்போது வரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸின் உருமாற்றத்தை ஆராய்ச்சி செய்து TAG-VE (TECHNICAL ADVISORY GROUP OF VIRUS EVOLUTION) தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது - தற்போது உலகின் பிரதான திரிபுகளாக பரவி வரும் LP.8.1 மற்றும் NB.1.8.1 ஆகியவற்றை ஆராய்ச்சி செய்த வரை இவற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த குந்தகமோ ஊறுநிலையோ அச்சுறுத்தலோ விளையும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதே ஆகும். இந்தியாவில் தொற்று அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணம் - பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. கூடவே தற்போது கொரோனா வைரஸ் சற்று வேகமாக பெருநகரங்களில் பரவி வருகிறது. அதனால் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனினும் வீரியமுள்ள வைரஸாக அது பரவவில்லை. ஆக்சிஜன் தேவைப்படுபவர்களோ ஐசியூவில் அட்மிட் ஆகுபவர்களோ இறப்பவர்களோ தொற்றாளர்கள் உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப நாம் அச்சம் கொள்ளும் அளவில் உயரவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கடந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு உலகில் கொரோனா எந்த நிலையில் இருந்ததோ அதே நிலை இந்த ஆண்டும் உள்ளது. 2023க்குப் பிறகு இதே போன்ற நிலை தான் உலகம் முழுவதும் நீடித்து வருகிறது எங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அலை ஏற்பட்டதாக பதிவில் இல்லை. மேலும் 2020 முதல் 2023 வரை கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை 2023 க்குப் பிறகு அதனால் ஏற்படுத்த முடியவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது. இப்போது கொரோனா மரணங்கள் என்று செய்திகள் வருகின்றனவே ? அதற்கு நாம் அச்சம் கொள்ள வேண்டுமா? நான் உங்களுக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன் நாள் ஒன்றுக்கு காச நோய்க்கு(Tuberculosis) நம் நாட்டில் 900 பேர் மரணிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 300+ பேர் வயிற்றுப் போக்கு நோயினால் மட்டுமே மரணிக்கின்றனர். இதை நான் கூறக்காரணம் ஒரு தொற்று நோய் என்றால் அதற்கு மரண விகிதங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அது பொது சுகாதார ஸ்திர நிலையை அச்சுறுத்தும் வகையில் இல்லாத வரை நாம் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இன்று இந்தியாவில் இறந்த ஐந்து நபர்களின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தேன். கேரளாவில் 80 வயது முதியவர் மரணித்துள்ளார். அவருக்கு நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்கனவே உள்ளது மஹாராஷ்ட்ராவில் 70 வயது மற்றும் 73 வயது முதியோர் இருவருக்கும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு உண்டு தமிழ்நாட்டில் இறந்த 69 வயது முதியவருக்கு நீரிழிவு கூட பார்கின்சன் நோய் இருந்தது தெரியவந்துள்ளது மேற்கு வங்காளத்தில் இறந்த 43 வயது நபர் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவிய தீவிர தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் கோவிட் நுரையீரல் நியுமோனியா மட்டுமே இறப்புக்கான காரணமன்று. மாறாக இவர்கள் பல்வேறு காரணங்களால் இறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போது கோவிட் தொற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பாசிடிவ் என்று வந்து அதனால் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம். இதை தற்செயலாக கோவிட் கண்டறியப்பட்ட நபர் (INCIDENTAL COVID DIAGNOSIS ) என்று கூறுவோம் தயவு கூர்ந்து நம் மக்கள் யாரும் பீதி நிலைக்குச் செல்ல வேண்டாம் அதே சமயம் ஒரு சுவாசப் பாதை தொற்று சமூகத்தில் பரவும் போது அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் கைகளை கண்ட இடங்களில் வைக்காதிருத்தல் கைகளை சோப் போட்டுக் கழுவுதல் தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை வைத்துக் கொள்ளுதல் முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முக்ககவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை வழக்கம் போலக் கடைபிடிக்கலாம் பீதி தேவையன்று எச்சரிக்கை உணர்வே போதுமானது நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

🙏 👍 ❤️ 😷 🤲 43
Doctor Farook Abdulla
6/11/2025, 7:01:13 AM
Post image
👍 ❤️ 🙏 15
Image
Doctor Farook Abdulla
6/11/2025, 7:01:27 AM
Post image
👍 ❤️ 🖕 20
Image
Doctor Farook Abdulla
6/14/2025, 3:45:56 AM

12.06.2025 அன்று இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம் . அவர்களை இழந்து வாடும் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக. என்ன நடந்தது? நேற்று சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 242 பேர் (169 இந்தியர்கள் + 53 பிரிட்டிஷார் + 7 போர்த்துகீசியர்கள் + ஒரு கனட நாட்டைச் சேர்ந்தவர்) கொள்ளளவு கொண்ட ஏர் இந்தியா 171 விமானம் தனது பயணத்தை லண்டன் மாநகரம் நோக்கித் தொடங்கியது. அதன் பயணம் முதல் கீழே விழுந்து நொருங்கியது வரையிலான காணொளி விமான நிலைய கண்காணிப்புக் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் ஓடுதளத்தில் வேகமாக ஓடி மேலெழும்பி அதற்கடுத்த கட்டமாக உயரத்தை தொட எத்தனிக்கையில் அதற்கு மேல் உந்து விசை கிடைக்காமல் ஏதோ கோளாறு நடக்க கீழே விழுந்து வெடித்துச் சிதறுகிறது. விமானத்தை இயக்கிய நிறுவனம் ஏர் இந்தியா விமானத்தை தயாரித்த நிறுவனம் போயிங் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில். 1932இல் ஜே.ஆர்.டி. டாட்டா அவர்களால் டாட்டா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு பிறகு ஏர் இந்தியாவாக மாறி நாட்டின் அடையாளமாகவே இருந்தது. பிறகு தேசம் சுதந்திரம் பெற்ற பின் 1953 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. எனினும் முறையான ஆளுமையின்றி சரியான நிர்வகிக்கப்படாமலும் பெருங்கடன் சுமைக்கு நிறுவனம் தள்ளப்பட்டது இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை டாட்டா நிறுவனம் 2.4 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி தற்போது "ஏர் இந்தியா" எனப்பெயரிட்டு நடத்தி வருகிறது. தெற்காசியாவில் இண்டிகோ நிறுவனத்துக்குப் பிறகு இரண்டாவது பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உள்ளூர் விமானப் பயணிகளில் 30% பங்கையும் சர்வதேச விமானப் பயணிகளில் 56% பங்கையும் ஏர் இந்தியா சேவை அளித்து வருகிறது. தொடர்ந்து பழைய விமானங்களை மாற்றி புதிதாக விமானங்களை ஏர் பஸ் மற்றும் போயிங் ஆகிய உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் செய்தும், இழந்த தனது பெயரை மீண்டும் பிடிக்கப் போராடி வருகிறது. எனினும் ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் நேற்றைய விபத்தானது அதன் முன்னேற்றத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தக் கூடும். நேற்று விபத்துக்குள்ளான விமானம் - அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. போயிங் 787-8 எனும் இந்த விமானம் ட்ரீம் லைனர் என்று செல்லப் பெயரிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 14 வருடங்களில் இந்த வகை விமானங்கள் இதுவரை 100 கோடி பயணிகளை சுமந்து சென்றிருக்கின்றனவாம். 50 லட்சம் பயணங்களையும் முடித்திருக்கின்றன. இத்தனை லட்சம் பயணங்கள் முடித்த பிறகும் நேற்று வரை, ஒரு முறை கூட இந்த வகை போயிங் 787-8 விமானங்கள் ஒருமுறை கூட ஓருயிரைக் கூட இழக்கும் விபத்தைச் சந்தித்ததில்லை அது போக விமானமே மொத்தமாக விபத்தில் அழிந்து போகும் "ஹல் லாஸ்" என்பதை நேற்றைய தினம் தான் தனது 14 வருட காலத்தில் முதல் முறையாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பயணிகள் + விமான ஓட்டிகள் + சிப்பந்திகள் உட்பட 248 பேர் பயணம் செய்யும் பெரிய ரகமாகும். எனினும் இதன் சிறப்பம்சம் ஏனைய பெரிய ரக விமானங்களை விட 25% குறைவாக எரிபொருள் செலவாகும் எகனாமிக் வெர்சனாக இருக்கிறது. ஒரு முறை பெட்ரோல் ஏற்றினால் 13,530 கிலோமீட்டர் இடைநில்லாமல் நான் ஸ்டாப் ஓடக்கூடியது. நேற்றைய தினம் விபத்துக்குள்ளான இந்த போயிங் 787-8 விமானத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜனவரி 28,2014 அன்று விலைக்கு வாங்கியது. வாங்கியது முதல் 8000 பயணங்களில் இந்த விமானம் மேலெழும்பிக் கீழறங்கியிருக்கிறது. கடந்த ஒரு வருடம் மட்டுமே 700 பயணங்களை இந்த விமானம் வெற்றிகரமாகச் செய்து முடிந்திருக்கிறது. மொத்தம் 41,000 மணிநேரங்கள் விண்ணில் பறந்து சேவையாற்றி 11.5 வருடங்கள் இடைநில்லாமல் பறந்திருக்கிறது இந்த ட்ரீம் லைனர். இத்தனை சிறப்புமிக்க விமானமும் நேற்று ஏன் கைவிட்டது? இந்த விமானம் டேக் ஆப் ஆகும் போது அதன் மொத்த எடை ( எரிபொருள் + விமானத்தின் பாகங்கள் + சுமைகள்) - 2 லட்சத்தி 27 ஆயிரத்தி 930 கிலோ அதாவது 227 டன்கள் எரிபொருள் மட்டுமே 1,25,000 லிட்டர் கொள்ளவு இருக்கும். விமானம் கீழிருந்து மேலேறி பிறகு கீழிறங்குவதை பின்வரும் செயல்முறைகாகப் பார்க்கலாம். டாக்சி / லோடிங் / அன்லோடிங் இது விமான நிலையங்களில் மக்களை ஏற்றிக் கொள்வதற்காக விமானம் நகர்வதைக் குறிக்கிறது அங்கிருந்து ஓடுதளம் நோக்கி வருவதை டாக்சி என்று கூறுவார்கள் இரண்டாவது படிநிலை டேக் ஆஃப் ரன் வே எனும் ஓடுதளத்தில் அதிவேகமாக விமானத்தை ஓட விட்டு சுமார் முப்பது முதல் ஐம்பது அடி உயரத்தை அடைவது டேக் ஆஃப் ஆகும். மூன்றாவது நிலை ஆரம்பக்கட்ட ஏற்றம் ( இனிசியல் க்ளைம்ப்) இதன் மூலம் விமானத்தை இன்னும் சில பத்து அடிகள் மேல் நோக்கி எழுப்புவார்கள் நான்காவது நிலை க்ளைம்ப் ( ஃப்ளேப்ஸ் அப்) இதன் மூலம் விமானத்தை 400 அடி முதல் 1500 அடி வரை ஒரு சேர உயர்த்திக் கொண்டு செல்வார்கள். ஐந்தாவது நிலை 30,000 முதல் 42,000 அடி உயரத்துக்கு உட்பட்ட பகுதியில் விமானத்தின் ஓட்டத்தை நிலை நிறுத்துவார்கள் இதற்கு க்ரூஸ் என்று பெயர் ஆறாவது நிலை தரையிறக்க வேண்டிய செல்லிடம் நெருங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்குவார்கள் இது டிசெண்ட் என்று அழைக்கப்படும் ஏழாவது மற்றும் எட்டாவது நிலை முதல் கட்ட மற்றும் இறுதி கட்ட முயற்சி எனப்படும் இறங்குமிடத்துக்கு மிக அருகில் பல நூறு அடிகள் கீழிறக்குதல் கடைசி நிலை லேண்டிங் எனப்படும் விமானத்தை தரையிறக்குதல் ஆகும். இதில் எந்த நிலையில் நேற்றைய போயிங் விமானம் விபத்துக்குள்ளானது? இவ்வாறாக 227 டன் எடையைத் தூக்கிக் கொண்டு டேக் ஆஃப் எனும் மேலெழும்பும் போது அதற்கடுத்த உயரத்தை எட்டுவதற்கு விமானத்தின் இரண்டு இஞ்சின்களும் ஒரு சேர த்ரஸ்ட் எனும் உந்து சக்தியை அளித்து இவ்வளவு எடையையும் பூமியின் ஈர்ப்பு சக்திக்கும் மீறி மேலெழும்பச் செய்ய வேண்டும். ஆனால் விமானி இறுதி நேரத்தில் குறிப்பிட்டது "த்ரஸ்ட் இல்லை... மே டே ..மே டே" என்று அறிவித்தார். மேலெழும்பத் தேவையான உந்து விசையை இஞ்சின்கள் கொடுக்கவில்லை. இப்போது என்ன ஆகும்? அவ்வளவு எடையுடன் பூமியின் ஈர்ப்பு விசை இழுக்க கீழே விழ வேண்டிய சூழல் ஏற்படும். 625 அடி உயரத்தில் இருந்து 227 டன் எடை கொண்ட அதிலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பூமியின் ஈர்ப்பு விசையால் படு வேகமாக இழுக்கப்பட்டு கீழே விழுமானால் அங்கு இம்பாக்ட் கொலிசன் ஃபோர்ஸ்- 13,92,545 நியூட்டன் அளவு ஆற்றல் விசை உருவாகியிருக்கும். இன்னும் எத்தனை ஆயிரம் ஃபாரன்ஹீட் வெப்பமும் அந்த வெடிப்பால் எத்தனை டிஎன்டி ஆற்றலும் வெளிப்பட்டிருக்கும் என்பதை கணிக்க இயலவில்லை. இத்தனை ஆற்றலையும் வாங்கிய இடம் பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியும் அதன் உணவு உட்கொள்ளும் இடமும் ஆகும். விமானத்துக்கு உள்ளே இருந்த பயணிகள் விமானம் மேலெழும்பத் தொடங்கிய முதல் முப்பது நொடிகள் எல்லாம் சரியாகச் செல்வதாக உணர்ந்திருப்பர் ஆனால் அடுத்த பத்து நொடிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. விமானிக்குக் கூட பத்து நொடிகள் என்பது ஏதும் நடவடிக்கையை துரிதமாக எடுக்க மிகக் மிகக் குறைந்த அவகாசமாகும். விமானம் பிரச்சனைக்குள்ளாகும் போது எரிபொருளை வெளியேற்றுவதற்கு ஃப்யூல் ஜெட்டிசன் என்பார்கள். இதை டம்பிங் என்றும் கூறுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது? வெறும் பத்தே நொடி... விமானம் விபத்துக்குள்ளானது க்ளைம்ப் எனும் நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 முதல் 2024 வரையிலான காலங்களில் லேண்டிங் நிலையில் 37% விபத்துகளும் க்ளைம்ப் நிலையில் 10% விபத்துகளும் டேக் ஆஃப் நிலையில் 13% விபத்துகளும் ஃபைனல் அப்ரோச் நிலையில் 10% டாக்சி 10% க்ரூஸ் 10% இனிசியல் க்ளைம்ப் 7% டிசெண்ட் 3% ஆகிய நிலைகளில் ஆபத்தான உயிர் பலி கோரிய விபத்துகள் நடந்துள்ளன. இதில் மிக அதிகமான பயணிகள் விபத்துக்குள்ளானது "க்ளைம்ப்" எனும் நான்காம் நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 2015 முதல் 2024 வரை 347 நபர்கள் இந்த நிலையில் விபத்து உண்டாகி இறந்துள்ளனர். போயிங் விமான விபத்துகளில் LOC - INFLIGHT அதாவது விமானத்துக்குள் நிகழும் லாஸ் ஆஃப் கண்ட்ரோல் தான் முதல் காரணமாக இருந்துள்ளது அதற்கடுத்த காரணமாக இருப்பது பறவைகள் மோதுதல்.. நேற்றைய விபத்துக்கும் LOC - INFLIGHT அல்லது பறவை மோதல் காரணமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. எனினும் இந்த விமான விபத்தை எண்ணி மொத்த விமான பயணங்கள் மீதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை காரணம் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் நிகழும் விமான பயணங்களில் பத்து லட்சம் பயணங்களுக்கு 0.09 என்ற அளவிலேயே உயிர் பலி கோரும் விமான விபத்துகள் நடந்து வருகின்றன. அதுவே இந்திய சாலைகளில் தினசரி 400+ மரணங்கள் நடந்து வருகின்றன. விமானப் பயணங்கள் அரிதாக நடப்பதாலும் கூடவே அதில் மரண விகிதங்கள் அதிகமாக இருப்பதாலும் செய்திகளில் இடம் பிடிக்கின்றன. எனவே இந்த ஒரு விபத்தை மட்டும் பார்த்து விட்டு விமானப் பயணங்களே ஆபத்தானவை என்ற எண்ணத்திற்கு நாம் வந்து விடக்கூடாது. நேற்றைய நிகழ்வில் அவசர வெளியேற்ற ஜன்னல் அருகே அமர்ந்திருந்த குறிப்பாக 11A என்ற இடத்தில் அமர்ந்திருந்த திரு விஸ்வாஸ் குமார் ரமேஷ் அவர்கள் விமானம் மோதி உடையும் போது துரிதமாக செயல்பட்டு வெளியே குதித்தால் சிறு காயங்களுடன் ஒரே நபராக உயிர் தப்பியுள்ளார். அதே விமானத்தை ட்ராபிக் காரணமாக தவறவிட்டு அதனால் உயிர்ப்பிழைத்த சகோதரியின் கதையையும் பார்க்கிறோம். தனது மகளைக் காணச் சென்று விமான விபத்தில் உயிர் நீத்த குஜராத் முன்னாள் முதல்வர் திரு விஜய் ரூபானி அவர்களை கடைசியாக செல்ஃபி எடுத்த சகோதரி ஒருவரின் புகைப்படம் இந்திய சுற்றுலாவை முடித்து லண்டனுக்கு மகிழ்ச்சியுடன் திரும்ப இருந்த பிரிட்டிஷ் சகோதர்கள் இருவரின் சிறு காணொளி ஒன்றும் தனது மருத்துவ பணியை விட்டுவிட்டு கணவருடன் லண்டனில் சென்று குடியேற எத்தனித்து பல கனவுகளுடன் பயணித்த பெண் மருத்துவர் அவரது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளின் கடைசி செல்ஃபி பக்ரீத் பெருநாள் கொண்டிவிட்டு லண்டன் திரும்பிய ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் புகைப்படம் என பார்க்கப் பார்க்க கவலை வேதனை மட்டுமே அதிகமாகிறது. விமானம் கீழே வந்து விழுந்த இடமான மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் பல கனவுகளுடன் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்த இளம் மருத்துவர்கள் பலியாகியிருப்பது பெரும் சோகமாகும். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுகள் அப்படி அப்படியே கிடக்கும் புகைப்படங்கள் உண்மையில் மனதை ரணமாக்குகின்றன இறந்த சகோதர சகோதரிகள் குறித்து என்ன ஆறுதல் கூறினாலும் பத்தாது எனினும் அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவினர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். டாட்டா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் தர முன்வந்திருப்பது வரவேற்க்கத்தக்கது. அதே சமயம் தனது விமானங்கள் மற்றும் அதன் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்து அதன் சேவை தரத்தை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம். இந்த விமான விபத்து நடந்ததற்கு விமான இஞ்சின் செயல்முறை கோளாறு காரணமா? விமான ஓட்டியின் கவனக்குறைவா? பறவை ஏதும் மோதியதா? விமான தொழில்நுட்பக் கோளாறா? இவையனைத்துக்கும் விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள கருப்புப் பெட்டி பதில் தரும் என்று நம்புவோம் இந்த பதிலைக் கொண்டு இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்போம். அதுவரை ஒட்டுமொத்த தேசத்துடன் சேர்ந்து இந்த மிகப்பெரும் துக்கத்தில் பங்கேற்போம். நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

👍 😢 🙏 ❤️ 😞 😭 🤲 39
Doctor Farook Abdulla
2/9/2025, 4:39:14 AM
❤️ 👍 😍 31
Link copied to clipboard!