Doctor Farook Abdulla
June 14, 2025 at 03:45 AM
12.06.2025 அன்று
இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம் .
அவர்களை இழந்து வாடும் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக.
என்ன நடந்தது?
நேற்று சரியாக
பிற்பகல் 1.30 மணிக்கு
பயணிகளை ஏற்றிக் கொண்டு
242 பேர் (169 இந்தியர்கள் + 53 பிரிட்டிஷார் + 7 போர்த்துகீசியர்கள் + ஒரு கனட நாட்டைச் சேர்ந்தவர்) கொள்ளளவு கொண்ட
ஏர் இந்தியா 171 விமானம்
தனது பயணத்தை லண்டன் மாநகரம் நோக்கித் தொடங்கியது.
அதன் பயணம் முதல் கீழே விழுந்து நொருங்கியது வரையிலான காணொளி
விமான நிலைய கண்காணிப்புக் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம் ஓடுதளத்தில் வேகமாக ஓடி
மேலெழும்பி அதற்கடுத்த கட்டமாக
உயரத்தை தொட எத்தனிக்கையில் அதற்கு மேல் உந்து விசை கிடைக்காமல் ஏதோ கோளாறு நடக்க கீழே விழுந்து
வெடித்துச் சிதறுகிறது.
விமானத்தை இயக்கிய நிறுவனம்
ஏர் இந்தியா
விமானத்தை தயாரித்த நிறுவனம்
போயிங்
ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில். 1932இல் ஜே.ஆர்.டி. டாட்டா அவர்களால் டாட்டா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு பிறகு ஏர் இந்தியாவாக மாறி நாட்டின் அடையாளமாகவே இருந்தது.
பிறகு தேசம் சுதந்திரம் பெற்ற பின் 1953 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
எனினும் முறையான ஆளுமையின்றி சரியான நிர்வகிக்கப்படாமலும் பெருங்கடன் சுமைக்கு நிறுவனம் தள்ளப்பட்டது
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு
மீண்டும் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை
டாட்டா நிறுவனம் 2.4 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி தற்போது "ஏர் இந்தியா" எனப்பெயரிட்டு நடத்தி வருகிறது.
தெற்காசியாவில் இண்டிகோ நிறுவனத்துக்குப் பிறகு இரண்டாவது பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் விமானப் பயணிகளில் 30% பங்கையும்
சர்வதேச விமானப் பயணிகளில் 56% பங்கையும் ஏர் இந்தியா சேவை அளித்து வருகிறது.
தொடர்ந்து பழைய விமானங்களை மாற்றி புதிதாக விமானங்களை ஏர் பஸ் மற்றும் போயிங் ஆகிய உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் செய்தும்,
இழந்த தனது பெயரை மீண்டும் பிடிக்கப் போராடி வருகிறது.
எனினும் ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில்
நேற்றைய விபத்தானது அதன் முன்னேற்றத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
நேற்று விபத்துக்குள்ளான விமானம் - அமெரிக்காவைச் சேர்ந்த
போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
போயிங் 787-8 எனும் இந்த விமானம்
ட்ரீம் லைனர் என்று செல்லப் பெயரிடப்பட்டது.
அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 14 வருடங்களில் இந்த வகை விமானங்கள் இதுவரை 100 கோடி பயணிகளை சுமந்து சென்றிருக்கின்றனவாம்.
50 லட்சம் பயணங்களையும் முடித்திருக்கின்றன.
இத்தனை லட்சம் பயணங்கள் முடித்த பிறகும் நேற்று வரை,
ஒரு முறை கூட இந்த வகை போயிங் 787-8 விமானங்கள் ஒருமுறை கூட ஓருயிரைக் கூட இழக்கும் விபத்தைச் சந்தித்ததில்லை
அது போக விமானமே மொத்தமாக விபத்தில் அழிந்து போகும் "ஹல் லாஸ்" என்பதை நேற்றைய தினம் தான் தனது 14 வருட காலத்தில் முதல் முறையாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தில்
பயணிகள் + விமான ஓட்டிகள் + சிப்பந்திகள் உட்பட 248 பேர் பயணம் செய்யும் பெரிய ரகமாகும்.
எனினும் இதன் சிறப்பம்சம் ஏனைய பெரிய ரக விமானங்களை விட 25% குறைவாக எரிபொருள் செலவாகும் எகனாமிக் வெர்சனாக இருக்கிறது.
ஒரு முறை பெட்ரோல் ஏற்றினால்
13,530 கிலோமீட்டர் இடைநில்லாமல் நான் ஸ்டாப் ஓடக்கூடியது.
நேற்றைய தினம் விபத்துக்குள்ளான
இந்த போயிங் 787-8 விமானத்தை
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
ஜனவரி 28,2014 அன்று விலைக்கு வாங்கியது.
வாங்கியது முதல்
8000 பயணங்களில் இந்த விமானம் மேலெழும்பிக் கீழறங்கியிருக்கிறது.
கடந்த ஒரு வருடம் மட்டுமே 700 பயணங்களை இந்த விமானம் வெற்றிகரமாகச் செய்து முடிந்திருக்கிறது.
மொத்தம் 41,000 மணிநேரங்கள் விண்ணில் பறந்து சேவையாற்றி 11.5 வருடங்கள் இடைநில்லாமல் பறந்திருக்கிறது
இந்த ட்ரீம் லைனர்.
இத்தனை சிறப்புமிக்க விமானமும் நேற்று ஏன் கைவிட்டது?
இந்த விமானம் டேக் ஆப் ஆகும் போது அதன் மொத்த எடை ( எரிபொருள் + விமானத்தின் பாகங்கள் + சுமைகள்) -
2 லட்சத்தி 27 ஆயிரத்தி 930 கிலோ
அதாவது 227 டன்கள்
எரிபொருள் மட்டுமே 1,25,000 லிட்டர் கொள்ளவு இருக்கும்.
விமானம் கீழிருந்து மேலேறி பிறகு கீழிறங்குவதை பின்வரும் செயல்முறைகாகப் பார்க்கலாம்.
டாக்சி / லோடிங் / அன்லோடிங்
இது விமான நிலையங்களில் மக்களை ஏற்றிக் கொள்வதற்காக விமானம் நகர்வதைக் குறிக்கிறது
அங்கிருந்து ஓடுதளம் நோக்கி வருவதை டாக்சி என்று கூறுவார்கள்
இரண்டாவது படிநிலை
டேக் ஆஃப்
ரன் வே எனும் ஓடுதளத்தில் அதிவேகமாக விமானத்தை ஓட விட்டு சுமார் முப்பது முதல் ஐம்பது அடி உயரத்தை அடைவது டேக் ஆஃப் ஆகும்.
மூன்றாவது நிலை
ஆரம்பக்கட்ட ஏற்றம்
( இனிசியல் க்ளைம்ப்)
இதன் மூலம் விமானத்தை இன்னும் சில பத்து அடிகள் மேல் நோக்கி எழுப்புவார்கள்
நான்காவது நிலை
க்ளைம்ப் ( ஃப்ளேப்ஸ் அப்)
இதன் மூலம் விமானத்தை 400 அடி முதல் 1500 அடி வரை ஒரு சேர உயர்த்திக் கொண்டு செல்வார்கள்.
ஐந்தாவது நிலை
30,000 முதல் 42,000 அடி உயரத்துக்கு உட்பட்ட பகுதியில் விமானத்தின் ஓட்டத்தை நிலை நிறுத்துவார்கள் இதற்கு க்ரூஸ் என்று பெயர்
ஆறாவது நிலை
தரையிறக்க வேண்டிய செல்லிடம் நெருங்கும் போது
கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்குவார்கள்
இது டிசெண்ட் என்று அழைக்கப்படும்
ஏழாவது மற்றும் எட்டாவது நிலை
முதல் கட்ட மற்றும் இறுதி கட்ட முயற்சி
எனப்படும் இறங்குமிடத்துக்கு மிக அருகில்
பல நூறு அடிகள் கீழிறக்குதல்
கடைசி நிலை
லேண்டிங் எனப்படும் விமானத்தை தரையிறக்குதல் ஆகும்.
இதில் எந்த நிலையில் நேற்றைய போயிங் விமானம் விபத்துக்குள்ளானது?
இவ்வாறாக 227 டன் எடையைத் தூக்கிக் கொண்டு டேக் ஆஃப் எனும் மேலெழும்பும் போது அதற்கடுத்த உயரத்தை எட்டுவதற்கு
விமானத்தின் இரண்டு இஞ்சின்களும் ஒரு சேர த்ரஸ்ட் எனும் உந்து சக்தியை அளித்து
இவ்வளவு எடையையும் பூமியின் ஈர்ப்பு சக்திக்கும் மீறி மேலெழும்பச் செய்ய வேண்டும்.
ஆனால் விமானி இறுதி நேரத்தில்
குறிப்பிட்டது
"த்ரஸ்ட் இல்லை... மே டே ..மே டே" என்று அறிவித்தார்.
மேலெழும்பத் தேவையான உந்து விசையை இஞ்சின்கள் கொடுக்கவில்லை.
இப்போது என்ன ஆகும்?
அவ்வளவு எடையுடன் பூமியின் ஈர்ப்பு விசை இழுக்க கீழே விழ வேண்டிய சூழல் ஏற்படும்.
625 அடி உயரத்தில் இருந்து
227 டன் எடை கொண்ட
அதிலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம்
பூமியின் ஈர்ப்பு விசையால் படு வேகமாக இழுக்கப்பட்டு கீழே விழுமானால்
அங்கு இம்பாக்ட் கொலிசன் ஃபோர்ஸ்-
13,92,545 நியூட்டன் அளவு ஆற்றல் விசை உருவாகியிருக்கும்.
இன்னும் எத்தனை ஆயிரம் ஃபாரன்ஹீட் வெப்பமும்
அந்த வெடிப்பால் எத்தனை டிஎன்டி ஆற்றலும் வெளிப்பட்டிருக்கும் என்பதை கணிக்க இயலவில்லை.
இத்தனை ஆற்றலையும் வாங்கிய இடம்
பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியும் அதன் உணவு உட்கொள்ளும் இடமும் ஆகும்.
விமானத்துக்கு உள்ளே இருந்த பயணிகள்
விமானம் மேலெழும்பத் தொடங்கிய
முதல் முப்பது நொடிகள் எல்லாம் சரியாகச் செல்வதாக உணர்ந்திருப்பர்
ஆனால் அடுத்த பத்து நொடிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
விமானிக்குக் கூட பத்து நொடிகள் என்பது ஏதும் நடவடிக்கையை துரிதமாக எடுக்க மிகக் மிகக் குறைந்த அவகாசமாகும்.
விமானம் பிரச்சனைக்குள்ளாகும் போது
எரிபொருளை வெளியேற்றுவதற்கு ஃப்யூல் ஜெட்டிசன் என்பார்கள். இதை டம்பிங் என்றும் கூறுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது?
வெறும் பத்தே நொடி...
விமானம் விபத்துக்குள்ளானது க்ளைம்ப் எனும் நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் 2024 வரையிலான காலங்களில்
லேண்டிங் நிலையில் 37% விபத்துகளும்
க்ளைம்ப் நிலையில் 10% விபத்துகளும்
டேக் ஆஃப் நிலையில் 13% விபத்துகளும்
ஃபைனல் அப்ரோச் நிலையில் 10%
டாக்சி 10%
க்ரூஸ் 10%
இனிசியல் க்ளைம்ப் 7%
டிசெண்ட் 3%
ஆகிய நிலைகளில் ஆபத்தான உயிர் பலி கோரிய விபத்துகள் நடந்துள்ளன.
இதில் மிக அதிகமான பயணிகள் விபத்துக்குள்ளானது
"க்ளைம்ப்" எனும் நான்காம் நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 2015 முதல் 2024 வரை 347 நபர்கள் இந்த நிலையில் விபத்து உண்டாகி இறந்துள்ளனர்.
போயிங் விமான விபத்துகளில்
LOC - INFLIGHT அதாவது
விமானத்துக்குள் நிகழும் லாஸ் ஆஃப் கண்ட்ரோல் தான் முதல் காரணமாக இருந்துள்ளது
அதற்கடுத்த காரணமாக இருப்பது பறவைகள் மோதுதல்..
நேற்றைய விபத்துக்கும் LOC - INFLIGHT அல்லது பறவை மோதல் காரணமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
எனினும் இந்த விமான விபத்தை எண்ணி மொத்த விமான பயணங்கள் மீதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை
காரணம்
ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் நிகழும் விமான பயணங்களில்
பத்து லட்சம் பயணங்களுக்கு
0.09 என்ற அளவிலேயே உயிர் பலி கோரும் விமான விபத்துகள் நடந்து வருகின்றன.
அதுவே இந்திய சாலைகளில் தினசரி 400+ மரணங்கள் நடந்து வருகின்றன.
விமானப் பயணங்கள் அரிதாக நடப்பதாலும் கூடவே அதில் மரண விகிதங்கள் அதிகமாக இருப்பதாலும் செய்திகளில் இடம் பிடிக்கின்றன.
எனவே இந்த ஒரு விபத்தை மட்டும் பார்த்து விட்டு விமானப் பயணங்களே ஆபத்தானவை என்ற எண்ணத்திற்கு நாம் வந்து விடக்கூடாது.
நேற்றைய நிகழ்வில் அவசர வெளியேற்ற ஜன்னல் அருகே அமர்ந்திருந்த குறிப்பாக 11A என்ற இடத்தில் அமர்ந்திருந்த திரு விஸ்வாஸ் குமார் ரமேஷ் அவர்கள் விமானம் மோதி உடையும் போது துரிதமாக செயல்பட்டு வெளியே குதித்தால் சிறு காயங்களுடன் ஒரே நபராக உயிர் தப்பியுள்ளார்.
அதே விமானத்தை ட்ராபிக் காரணமாக தவறவிட்டு அதனால் உயிர்ப்பிழைத்த சகோதரியின் கதையையும் பார்க்கிறோம்.
தனது மகளைக் காணச் சென்று விமான விபத்தில் உயிர் நீத்த குஜராத் முன்னாள் முதல்வர் திரு விஜய் ரூபானி அவர்களை கடைசியாக செல்ஃபி எடுத்த சகோதரி ஒருவரின் புகைப்படம்
இந்திய சுற்றுலாவை முடித்து லண்டனுக்கு மகிழ்ச்சியுடன் திரும்ப இருந்த பிரிட்டிஷ் சகோதர்கள் இருவரின் சிறு காணொளி ஒன்றும்
தனது மருத்துவ பணியை விட்டுவிட்டு கணவருடன் லண்டனில் சென்று குடியேற எத்தனித்து பல கனவுகளுடன் பயணித்த பெண் மருத்துவர் அவரது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளின் கடைசி செல்ஃபி
பக்ரீத் பெருநாள் கொண்டிவிட்டு லண்டன் திரும்பிய ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் புகைப்படம் என பார்க்கப் பார்க்க கவலை வேதனை மட்டுமே அதிகமாகிறது.
விமானம் கீழே வந்து விழுந்த இடமான
மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் பல கனவுகளுடன் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்த இளம் மருத்துவர்கள் பலியாகியிருப்பது பெரும் சோகமாகும்.
அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுகள் அப்படி அப்படியே கிடக்கும் புகைப்படங்கள் உண்மையில் மனதை ரணமாக்குகின்றன
இறந்த சகோதர சகோதரிகள் குறித்து என்ன ஆறுதல் கூறினாலும் பத்தாது
எனினும் அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவினர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டாட்டா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் தர முன்வந்திருப்பது வரவேற்க்கத்தக்கது.
அதே சமயம் தனது விமானங்கள் மற்றும் அதன் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்து அதன் சேவை தரத்தை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்.
இந்த விமான விபத்து நடந்ததற்கு
விமான இஞ்சின் செயல்முறை கோளாறு காரணமா?
விமான ஓட்டியின் கவனக்குறைவா?
பறவை ஏதும் மோதியதா?
விமான தொழில்நுட்பக் கோளாறா?
இவையனைத்துக்கும் விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள கருப்புப் பெட்டி பதில் தரும் என்று நம்புவோம்
இந்த பதிலைக் கொண்டு இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்போம்.
அதுவரை
ஒட்டுமொத்த தேசத்துடன் சேர்ந்து
இந்த மிகப்பெரும் துக்கத்தில்
பங்கேற்போம்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
👍
😢
🙏
❤️
❤
😞
😭
🤲
39