
Haranprasanna
453 subscribers
About Haranprasanna
Writings of Haranprasanna, Tamil, India. தமிழ், இந்தியா, ஹரன் பிரசன்னா
Similar Channels
Swipe to see more
Posts

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா? தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா? மத்திய அரசின் உள்நோக்கம் என்ன? கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன். https://www.youtube.com/watch?v=MBxuSoLHXdw Pl share.

வடக்கன் (M) - சுமாரான திரைப்படம்தான். ஆனால்... சில மலையாளப் படங்களை சுமார் என்று சொல்லிவிட்டு ஆனாலும் புறக்கணிக்க முடியாததாக இருக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே அந்த வகையில் வருகின்றன. ஆஹா ஓஹோ என்று கொண்டாடவும் முடியவில்லை. சுத்தக் குப்பை என்று தள்ளவும் முடியவில்லை. அதில் ஒன்று வடக்கன்.(ஹிந்தி வடக்கன் என்ற பொருளில் அல்ல.) பேய்த் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். நமக்கு அதிகம் அறிமுகமானது காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள்தான். ஆனால் மலையாளத்தில் வேறு வகையும் வருகின்றன. குமாரி, பூதகாலம், பிரமயுகம் போன்ற சைக்காலஜிக்கல் ஹாரர். இதில் இந்த மூன்றுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. அந்த மூன்று திரைப்படங்களிலும் எனக்குச் சில குறைகள் இருந்தாலும் கூட, அவை முக்கியமான திரைப்படங்கள் என்பதில் மாற்றமில்லை. இந்தத் திரைப்படம் அந்த அளவுக்குப் போகவில்லை என்பது பெரிய குறை. முதல் முக்கால் மணி நேரம் சாகடித்து விட்டார்கள். ஏன் இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும் என்று விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்ல கதை விறுவிறுப்பாகிறது. சைக்கலாஜிக்கல் தில்லர் வகைக்குள் போகிறது. ஃபிளாஷ்பேக் கட்சிகளில் ஜாதிய வேறுபாடு, தெய்யம் ஆட்டம், அதன் பின்னால் இருக்கும் காமம் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால் அதை எடுத்த விதம் பார்க்க வைக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வழக்கமான பேய்ப் படங்கள் போல அல்லாமல் ஒரு சீரியஸான பேய்ப் படமாக எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கதாநாயகியின் நடிப்பு, ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் கூட, மிரள வைக்கிறது. இன்னொரு குறை என்று பார்த்தால் கதாநாயகனாக கிஷோரை நடிக்க வைத்தது. பொறுமையாக, கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். முக்கியமான விஷயம் 18+ திரைப்படம்.

Eleven (T) - இந்தப் படம் மிக நல்ல படம் என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றால் தமிழ்ப் படங்களைப் பார்த்து பார்த்து தமிழர்கள் எத்தனை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் என்பது புரியும். படத்தின் முதல் ஒரு மணி நேரம் தாங்க முடியாத அறுவை. பின்பு போனால் போகிறது என்று மெல்ல வேகம் எடுக்கத் தொடங்குகிறது. அப்போதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அடுத்தடுத்து என்ன வரும் என்று வசனத்திலிருந்து கதை முதல் அத்தனையையும் சொல்லிக் கொண்டே வர, அனைத்தும் அப்படியே திரையில் வந்தன. கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். படம் பார்க்கிறவனை எல்லாம் பைத்தியக்காரன் என்று இயக்குநர் நினைத்தால்தான் அப்படி ட்விஸ்ட் வைக்கத் தோன்றும். அந்த டிவிஸ்ட்டுக்கு அடுத்து இன்னொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் ஓகே. ஆனால் இதைப் போன்ற படங்கள் எல்லாம் எரிச்சலைத் தருகின்றன. சின்ன வயதில் சிறுவர்கள் தெரியாமல் செய்ததற்கு இத்தனை கொடூரமான தண்டனை. இத்தனைக்கும் அவர்கள் பெரிய அளவில் எதையும் செய்துவிடவில்லை. கல்லூரி என்று காண்பித்திருந்தால் கூட ஓகே. பள்ளியில் பசங்களுக்கு என்ன தெரியும்? அதற்காக 11 பேரை ஒரு சைகோ கொல்கிறான். அவன் மேல் அத்தனை பரிவு வரும்படி திரைக்கதை. அந்த டீச்சர் சரியான பைத்தியக்கார டீச்சராக இருக்க வேண்டும். முதலில் அந்த டீச்சரை உள்ளே தள்ள வேண்டும. என்ன ஆனாலும் பெஞ்சமினுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்கிறார். 10 பேர் இறந்தது அந்தப் பெண்ணுக்குத் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெஞ்சமின் உயிர் போய் விடக் கூடாது என்பதில் அத்தனை அக்கறை. படத்தில் வில்லன் பெயரை பெஞ்சமின் என்றதும் ஆஹா கிறித்துவப் பெயர் வைத்திருக்கிறார்களே, அதுவும் பிரபு சாலமன் தயாரிப்பிலா என்று ஆச்சரியப்பட்டேன். பெஞ்சமின் கொலை செய்வது சரிதான் என்று கடைசி வரை பார்வையாளரை நம்ப வைக்கும்படியான திரைக்கதை எழுதி, அவனைத் தியாகியாக்கி... நல்லா உழைக்கறீங்கப்பா. நடித்து விடக்கூடாது என்பதில் ஹீரோ மிகக் கவனமாக இருந்திருக்கிறார். ஹீரோயின் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்தடுத்த படங்களில் துணை நடிகையாக நடிக்கப் போவது நல்லது. ஹீரோ மெல்ல நடந்து வருகிறார் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போவதற்குள் இரண்டு முறை பார்வர்ட் செய்து படம் பார்த்தால் சீக்கிரம் படத்தை பார்த்து முடித்து விடலாம். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

விருதுகள் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதில்லை, அதில் லாபி இருக்கிறது என்று இடதுசாரிகளும் திராவிட ஆதர்வாளர்களும் கூடுதலாக எழுத்தாளர்களுமாக இருப்பவர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே விருதுகள் எதிர்-இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் எதிர்-திராவிட எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதில் உள்ள லாபியைப் பற்றி, அறமின்மையைப் பற்றி, அரசியலைப் பற்றி ஒருபோதும் இவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். சந்தோஷமும் படுவார்கள். ஜோடி குரூஸ் போன்ற ஒருவருக்கு ஒருவேளை எப்போதாவது விருது கிடைத்துவிட்டால் அவர் அந்தக் காலத்தில் மோடி ஆதரவாளர் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டு, அவருக்கு எப்படி விருது தரலாம் என்று பொங்கவும் செய்வார்கள். விருதுக்கு முதலில் ஆதரவு தந்தவர்களோ பயந்து போய் 'அவர் இப்படி ஒரு அரசியலுக்கு ஆதரவாளராக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியாது' என்று பம்மு பம்மென்று பம்மவுவும் செய்வார்கள். 'நீங்க மட்டும் மோடியையும் பாஜகவையும் சப்போர்ட் செய்யலன்னா நல்லா இருக்கும்' என்று என் காது படவும் என் காதுக்குப் பின்னாலும் பேசியிருக்கிறார்கள். அதில் இருப்பது அக்கறை என்றாலும் இதைச் சொல்பவர்களே இடதுசாரி மற்றும் திராவிட ஆதரவாளர்களுக்குச் சிங்கி அடிப்பதை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நெஞ்சம் முழுக்க, 'நான் ஒரு நடுநிலையாளர். ஏனென்றால் நான் எழுத்தாளர்' என்கிற சுய-ஏமாற்று மண்டிக் கிடக்கிறது. இரட்டை நாக்குகள் இப்படித்தான் உருவாகி இதுவே நியாயம் நேர்மை என்று நிலை செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி இந்த லாபிச் சண்டை எல்லாம் சொல்ல வருவது, 'நானும் திராவிட இயக்க ஆதரவாளர்தானே... நானும் இடதுசாரி ஜால்ராதானே... எனக்கு ஏன் தரப்படுவதில்லை?' என்பதைத்தான். 'என்னை விட சிறப்பாக எழுதும் எதிர்க் கருத்துக் காரனுக்கு ஏன் தரப்படுவதில்லை?' என்பதை அல்ல.

தக் லைஃப் விமர்சனம்... இயர் வைத்துக் கேட்கவும். பாடப் போகிறேன் என்று பயப்படவேண்டாம். முதல் சில நொடிகள் ஆடியோ பிரச்சினை! https://youtu.be/w0BoI8-4VNg

இரு குரல்கள் ஒரு பேருக்காக இரண்டு குரல்கள் என்று தலைப்பு வைத்திருந்தாலும் பல்வேறு விஷயங்களைக் கலந்தடித்துச் சொல்லப் போகிறேன். கமல் ரசிகர்கள் இப்போதே இங்கிருந்து விலகிப் போய்விடும். குறிப்பாக கமல் குரல் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் போய் விடுங்கள். ஆரம்பக் காலத்தில் எனக்கும் கமல் குரல் என்னவோ பிடித்துத்தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கமல் குரலைக் கேட்கவே ஒரு எரிச்சல் வருகிறது. சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் தொடக்கக் காட்சியில் கமல் குரலைக் கேட்டபோது, இந்தக் கொடுமையைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்றியது. கமல் நடிப்பில் புகுந்துகொண்டுவிட்ட செயற்கைத் தனம், அவரது குரலிலும் புகுந்துகொண்டு, மிகவும் சாதாரணப் பேச்சிலும் புகுந்துகொண்டு விட்டது. கதவு திறந்திருக்கிறது, போய்விடலாம் என்று அரசியல் பேச்சிலும் சரி, நாட்டுக்காக வந்திருக்கிறேன் என்ற அரசியல் பதிலிலும் சரி, முழுக்க செயற்கைத்தனமே. சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் கமல் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் எனக்கு அப்படித்தான். அப்படியே சோகத்தைப் பிழிகிறாராம். சிலர் இப்பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாட்டுடன் ஒப்பிட்டார்கள். இனி தென்பாண்டிச் சீமையிலே பாடலும் பிடிக்காமல் போய்விடக் கூடாது முருகா என்று வேண்டிக் கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தக் லைஃப் படத்தில் வந்திருக்கும் முத்தமழை பாடலை சின்மயி பாடி இருக்கிறார். படத்தில் பாடி இருக்கும் தீ-யை விட இவர் நன்றாகப் பாடுகிறார் என்று அனைவரும் சொல்கிறார்கள். (எனக்கு தீ பாடியதே பிடித்திருக்கிறது. காரணம், அதில் ஒரு புதுமை இருக்கிறது. சின்மயி அட்டகாசமாகப் பாடி இருக்கிறார் என்றாலும் அது எப்போதும் போல் இருக்கிறது.) இப்படி ஒரு பாடலை இன்னொருவர் பாடமாட்டாரா என்று நான் யோசித்த காலங்கள் உண்டு. அது பின்னர் நினைவானது. யேசுதாஸ் பாடிய சில பாடல்களை எஸ்பிபி பாடிக் கேட்டேன். ஆனாலும் என்னவோ ஒரு நிறைவின்மை. ஏனென்றால், எஸ்பிபியோ யேசுதாஸோ பாடலைப் பாடிக் கெடுத்ததில்லை. இதனால் ஒருவர் பாடலை மற்றவர் பாடுவதில் ஓர் ஆர்வம் தாண்டி பெரிய கிக் இருக்க வாய்ப்பில்லை. முன்பு கமல் நடித்து சத்யா என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அவர் ஆங்கரி யங் மேன். கோபக்கார இளைஞன் என்பதை கமல் எப்படிப் புரிந்து கொண்டாரோ, எல்லாக் கட்சியிலும் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார். முகத்தை என்னவோ போல வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அதில் கமல் பாடிய பாடல் தோட்டா துடிக்குது துடிக்குது. அந்தக் குரல் எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்பிபி பாடியிருந்தால் அந்தப் பாடல் வேறு தளத்திற்குப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதேபோல் கமல் குரலில் பாடிய ‘விகரம்’ பாடலை வேறு யாராவது பாட மாட்டார்களா என்று நினைத்திருந்தேன். இப்படி வேறு யார் பாடினாலும் எனக்கு மிக முக்கியமாக, மூலப் பாடலின் பாவம் மாறாமல் இருக்க வேண்டும். சில சமயம் எஸ்பிபி மேடைகளில் தன் இஷ்டம் போல் மாற்றிப் பாடி விடுவார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. பாடகர் ஒழுங்காக மாற்றாமல் பாடினால், பின்னணி இசை சிறப்பாக அமையாது. இப்படி எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மாற்றமே இல்லாமல் அதே பாடலை வேறொருவர் பாடிக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி நான் நினைத்துக் கொண்ட இன்னொரு கமல் பாடல் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல். இதில் கமல் குரலைக் கேட்கவே எரிச்சலாகத்தான் இருந்தது. சமீபத்தில் ஏதோ ஒரு youtube சேனலில் விக்ரம் பாடலை பாடகர் கார்த்திக் பாடிக் கேட்டபோது அப்படியே மனம் அள்ளிக் கொண்டது. இந்தப் பாடலை கமல் கட்டைக் குரலில் பாடிக் கெடுத்து வைத்திருந்திருப்பார். அதையே தொழில்முறை பாடகர் கார்த்திக் பாடும் போது அதே பாடல் எங்கயோ போய் விட்டது. கார்த்திக்கின் வாழ்நாள் பாடலாக இது இருக்கும். இல்லையென்றாலும், எனக்கான கார்த்திக்கின் வாழ்நாள் பாடல் இதுவே. மிகவும் உச்ச ஸ்தாயியில் கமல் பாடிய பாடல் என்று ‘நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலைச் சொல்வார்கள் அவரது ரசிகர்கள். அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. ஆனால் கமல் அந்தப் பாடலில் காட்டுக் கத்தலாகக் கத்தித்தான் பாடி இருந்தார். அந்த பாடலையும் கார்த்திக் பாடினால் அதையும் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். கமல் ரசிகர்கள் பொதுவாக எந்த நடிகர் கமலைப் போலப் பாட முடியும் என்பார்கள். அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பாடல்களைக் கேட்கலாம். குரலில் தேன் வழிகிறது என்றால் அது ராஜ்குமாரின் குரலில்தான். இரண்டு குரல்கள் என்று தலைப்பிட்டுவிட்டு இரண்டு மாற்றுக் குரல்களாகப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை. எனக்கு இரண்டு குரல்கள் சுத்தமாகப் பிடிக்காது. அதில் ஒன்றைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிவிட்டேன். இன்னொரு குரல் விஜய் சேதுபதி குரல். Karthik's vikaram song https://www.youtube.com/watch?v=kAexBq3z9KM

ஔசப்பின்டெ ஒசியத்து (M) - நல்ல திரைப்படம். அசல் மலையாளத் திரைப்படம். மெல்ல நகரும் திரைப்படம் என்றாலும் முழுக்கப் பரபரப்பைத் தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது. போலீசின் தேடுதல் காட்சிகள் ஆரம்பித்த பிறகு, ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ உயில் சம்பந்தப்பட்ட திரைப்படம் என நினைத்து விட்டேன். இல்லை. இதுவும் ஒரு வகையில் திரில்லர் போன்றதுதான். ஆனால் இந்த முறை கடுமையான கொலை, தேடல் என்றெல்லாம் இல்லாமல், ஏன் எதற்கு கொலை என்பதெல்லாம் முதலிலேயே காட்டிவிட்டு, அதை ஒரு பாசப் போராட்டமாகச் சித்திரித்து இருக்கிறார்கள். அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. அதிலும் திலீஷ் போத்தன் அட்டகாசம். கலங்கடிக்கிறார். அதேபோல் விஜயராகவன். அருமையான நடிப்பு. எந்த நடிகருக்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை இறுக்கி இருந்தால் படம் இன்னும் வேறு தளத்திற்குப் போயிருக்கும். இப்போதே கூட தவறவிடக் கூடாத படமே. வழக்கம் போல கேரளத்தின் நிலமும் இயற்கையும் ஒரு கதாபத்திரத்தைப் போலவே திரைப்படம் முழுக்கத் தொடர்ந்து வருகிறது. கேரளத் திரைப்படத்துக்குள் நம்மை சட்டென இழுத்துக் கொள்வது அவர்கள் தேர்ந்தெடுக்கும் லொகேஷன்தான். நாராயணின்டெ மூணான்மக்கள் திரைப்படம் போன்ற ஒரு மனநிலை கொண்ட திரைப்படம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் தந்த எரிச்சலை இந்தப் படம் போக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்

மாஞ்சோலை 1349/2 எனும் நான். நூல் அறிமுகம். https://www.youtube.com/watch?v=xaerbsg3x1s

கிட்டத்தட்ட 13 வருடங்கள் வருடங்களுக்குப் பிறகு ஒரு ஐபிஎல் சீரியஸை முழுமையாகப் பார்க்கிறேன். மொத்தமாக ஒன்று இரண்டு ஆட்டங்கள் அதிலும் அந்தந்த ஆட்டங்களின் பாதி பாதி பார்க்காமல் போய் விட்டிருக்கலாம். எப்போதும் மும்பை அணி வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. காரணம் முன்பு சச்சின். இப்போது ரோகித் சர்மா. ஆனால் இந்த முறை மும்பை தவிர பல அணிகளின் பல ஆட்டக்காரர்களை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன், மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி என்று பலர் திறமையாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்கள். பும்ராவைத் தனியே சொல்ல வேண்டியது இல்லை. இவர்களெல்லாம் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள். வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடினால் ரசிப்பேன் என்பதைத் தாண்டி இந்திய அணிக்கான எதிர்கால ஆட்டக்காரர்களைப் பார்க்கும் அளவுக்கு விருப்பத்துடன் நான் பார்ப்பதில்லை. இன்று நடக்க இருக்கும் பஞ்சாப் மற்றும் மும்பை இடையிலான எலிமினேட்டர் சுற்றில் மும்பை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. பஞ்சாப் போன்ற அணி தோற்கிறதே என்ற வருத்தத்தையும் சொல்லி மாளாது. எனவே 51 - 49 என்ற ஆதரவில் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தை நான் இன்று பார்க்கப் போகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரை போன்ற ஒருவரை டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கான கேப்டனாகப் போடாதது பெரிய தவறு. ஆர்சிபி அணி எனக்கு அத்தனை இஷ்டமானது அல்ல என்றாலும், கோலியின் அர்பணிப்பும் ஆட்டமும் உலகத்தரம். ஏன் கோலி எல்லா வகை ஆட்டங்களிலும் கொண்டாடப்படுகிறார் என்றால், அவரது அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். சில சமயம் அவர் அதீதமாகக் கத்துவது எரிச்சலைத் தந்தாலும் கூட, இந்த வயதிலும் 18 வயது ஆட்டக்காரரின் மனோபாவத்தை அவர் கைக்கொண்டிருப்பதே அவரது வெற்றிக்கு அடித்தளம் என்றும் நினைக்கிறேன்.

நினைவூட்டல் மொத்தம் ஒரு லட்சம் பரிசுத் தொகை. -- சுவாசம் பதிப்பகம் மற்றும் எழுத்தாளர். ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்தும் வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி – 2025 முதல் பரிசு ரூ.50,000 இரண்டாம் பரிசு ரூ.25,000 மூன்றாம் பரிசு ரூ.10,000 ஆறுதல் பரிசு ( மூன்று கதைகளுக்கு தலா) ரூ.2,000 சுவாசம் பதிப்பகம் நடத்துகின்ற இப்போட்டி எழுத்தாளர் ராமசந்திரன் உஷாஅவர்களின் பாட்டியும் தேர்ந்த வாசகியுமான 'வரலக்ஷ்மி அம்மாள்' அவர்கள் பெயரில் 'வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி 2025' என அறிவிக்கப்படுகிறது. நோக்கம் புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது. படைப்புத் திறனை ஊக்குவிப்பது. படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களைப் பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்படுகிறது. விதிமுறைகள் *இந்த நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். * ஒரு நபருக்கு ஒரு நாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. * நாவலின் அளவு குறைந்தபட்சம் 32000 முதல் 50000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். * நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம் (சமூகம் அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், புனைவு, வரலாற்றுப்புனைவு, யதார்த்தவாதம், கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை....) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected] படைப்பினை அனுப்புவதற்குக் கடைசி நாள் : 31 ஜூலை 2025. போட்டி முடிவுகள் நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும். * போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் எனக் கண்டறிவது அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. உறுதிமொழி படைப்பை அனுப்பியதில் இருந்து போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும். எந்த ஒரு மதத்தையோ ஜாதியையோ இனத்தையோ காழ்ப்புடன் தாழ்த்திச் சொல்லும் படைப்பு ஏற்கப்படாது. ஏற்கெனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புத்தகம் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும். மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைத்திருக்க வேண்டும். படைப்புகளை MS WORD FILE-ல் UNICODE முறையில் மட்டுமே அனுப்பவேண்டும் PDF FILE-கள் நிராகரிக்கப்படும். தேர்வும் பரிசும் * இப்போட்டியின் முடிவில் பதினைந்து நாவல்கள் Shortlist செய்யப்படும். * இந்தப் பதினைந்து நாவல்களிலிருந்து பரிசுக்குரிய புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும். * பரிசு பெற்ற நாவல்கள் சுவாசம் பதிப்பகம் மூலம் வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]