Haranprasanna
                                
                            
                            
                    
                                
                                
                                June 4, 2025 at 02:34 AM
                               
                            
                        
                            இரு குரல்கள்
ஒரு பேருக்காக இரண்டு குரல்கள் என்று தலைப்பு வைத்திருந்தாலும் பல்வேறு விஷயங்களைக் கலந்தடித்துச் சொல்லப் போகிறேன். கமல் ரசிகர்கள் இப்போதே இங்கிருந்து விலகிப் போய்விடும். குறிப்பாக கமல் குரல் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் போய் விடுங்கள். 
ஆரம்பக் காலத்தில் எனக்கும் கமல் குரல் என்னவோ பிடித்துத்தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கமல் குரலைக் கேட்கவே ஒரு எரிச்சல் வருகிறது. சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் தொடக்கக் காட்சியில் கமல் குரலைக் கேட்டபோது, இந்தக் கொடுமையைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்றியது. 
கமல் நடிப்பில் புகுந்துகொண்டுவிட்ட செயற்கைத் தனம், அவரது குரலிலும் புகுந்துகொண்டு, மிகவும் சாதாரணப் பேச்சிலும் புகுந்துகொண்டு விட்டது. கதவு திறந்திருக்கிறது, போய்விடலாம் என்று அரசியல் பேச்சிலும் சரி, நாட்டுக்காக வந்திருக்கிறேன் என்ற அரசியல் பதிலிலும் சரி, முழுக்க செயற்கைத்தனமே.
சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் கமல் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் எனக்கு அப்படித்தான். அப்படியே சோகத்தைப் பிழிகிறாராம். சிலர் இப்பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாட்டுடன் ஒப்பிட்டார்கள். இனி தென்பாண்டிச் சீமையிலே பாடலும் பிடிக்காமல் போய்விடக் கூடாது முருகா என்று வேண்டிக் கொண்டேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தக் லைஃப் படத்தில் வந்திருக்கும் முத்தமழை பாடலை சின்மயி பாடி இருக்கிறார். படத்தில் பாடி இருக்கும் தீ-யை விட இவர் நன்றாகப் பாடுகிறார் என்று அனைவரும் சொல்கிறார்கள். (எனக்கு தீ பாடியதே பிடித்திருக்கிறது. காரணம், அதில் ஒரு புதுமை இருக்கிறது. சின்மயி அட்டகாசமாகப் பாடி இருக்கிறார் என்றாலும் அது எப்போதும் போல் இருக்கிறது.) இப்படி ஒரு பாடலை இன்னொருவர் பாடமாட்டாரா என்று நான் யோசித்த காலங்கள் உண்டு. அது பின்னர் நினைவானது. யேசுதாஸ் பாடிய சில பாடல்களை எஸ்பிபி பாடிக் கேட்டேன். ஆனாலும் என்னவோ ஒரு நிறைவின்மை. ஏனென்றால், எஸ்பிபியோ யேசுதாஸோ பாடலைப் பாடிக் கெடுத்ததில்லை. இதனால் ஒருவர் பாடலை மற்றவர் பாடுவதில் ஓர் ஆர்வம் தாண்டி பெரிய கிக் இருக்க வாய்ப்பில்லை. 
முன்பு கமல் நடித்து சத்யா என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அவர் ஆங்கரி யங் மேன். கோபக்கார இளைஞன் என்பதை கமல் எப்படிப் புரிந்து கொண்டாரோ, எல்லாக் கட்சியிலும் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார். முகத்தை என்னவோ போல வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அதில் கமல் பாடிய பாடல் தோட்டா துடிக்குது துடிக்குது. அந்தக் குரல் எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்பிபி பாடியிருந்தால் அந்தப் பாடல் வேறு தளத்திற்குப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 
அதேபோல் கமல் குரலில் பாடிய ‘விகரம்’ பாடலை வேறு யாராவது பாட மாட்டார்களா என்று நினைத்திருந்தேன். இப்படி வேறு யார் பாடினாலும் எனக்கு மிக முக்கியமாக, மூலப் பாடலின் பாவம் மாறாமல் இருக்க வேண்டும். சில சமயம் எஸ்பிபி மேடைகளில் தன் இஷ்டம் போல் மாற்றிப் பாடி விடுவார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. பாடகர் ஒழுங்காக மாற்றாமல் பாடினால், பின்னணி இசை சிறப்பாக அமையாது. இப்படி எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மாற்றமே இல்லாமல் அதே பாடலை வேறொருவர் பாடிக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி நான் நினைத்துக் கொண்ட இன்னொரு கமல் பாடல் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல். இதில் கமல் குரலைக் கேட்கவே எரிச்சலாகத்தான் இருந்தது. 
சமீபத்தில் ஏதோ ஒரு youtube சேனலில் விக்ரம் பாடலை பாடகர் கார்த்திக் பாடிக் கேட்டபோது அப்படியே மனம் அள்ளிக் கொண்டது.  இந்தப் பாடலை கமல் கட்டைக் குரலில் பாடிக் கெடுத்து வைத்திருந்திருப்பார். அதையே தொழில்முறை பாடகர் கார்த்திக் பாடும் போது அதே பாடல் எங்கயோ போய் விட்டது. கார்த்திக்கின் வாழ்நாள் பாடலாக இது இருக்கும். இல்லையென்றாலும், எனக்கான கார்த்திக்கின் வாழ்நாள் பாடல் இதுவே. 
மிகவும் உச்ச ஸ்தாயியில் கமல் பாடிய பாடல் என்று ‘நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்’  பாடலைச் சொல்வார்கள் அவரது ரசிகர்கள். அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. ஆனால் கமல் அந்தப் பாடலில் காட்டுக் கத்தலாகக் கத்தித்தான் பாடி இருந்தார். அந்த பாடலையும் கார்த்திக் பாடினால் அதையும் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். 
கமல் ரசிகர்கள் பொதுவாக எந்த நடிகர் கமலைப் போலப் பாட முடியும் என்பார்கள். அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பாடல்களைக் கேட்கலாம். குரலில் தேன் வழிகிறது என்றால் அது ராஜ்குமாரின் குரலில்தான்.
இரண்டு குரல்கள் என்று தலைப்பிட்டுவிட்டு இரண்டு மாற்றுக் குரல்களாகப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை. எனக்கு இரண்டு குரல்கள் சுத்தமாகப் பிடிக்காது. அதில் ஒன்றைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிவிட்டேன். இன்னொரு குரல் விஜய் சேதுபதி குரல்.
Karthik's vikaram song https://www.youtube.com/watch?v=kAexBq3z9KM
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        3