Para
February 1, 2025 at 04:16 AM
படித்து ரசித்தேன் - வினோத்குமார் சாண்டில்யன் அவர்கள் படைத்த யவனராணி நாவல் , கடலுக்குள் மூழ்கிப் போன பூம்புகார் என்னும் அதி சுறுசுறுப்பான ஒரு துறைமுகத்தை நம் மணக்கண் முன்னே ஆசிரியர் நிர்மாணித்துவிட்டார். கதையின் நாயகி யவன ராணி அறிமுக காட்சியிலேயே நம்மை கொள்ளை கொண்டு போவது உறுதி.யவன நாட்டில் பிறந்து யவன ராஜ குடும்பத்தால் சோழ சாம்ராஜ்யத்தை கைப்பற்றி ஆள அனுப்பப்பட்டவள் இந்த யவனராணி. புனைவு கதாபாத்திரமா அல்லது உண்மையான வரலாற்று கதாபாத்திரமா என முடிவுக்கு வர முடியாத சோழ நாட்டு உப தளபதி இளஞ்செழியன் ஆகச்சிறந்த நாயகன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நெருக்கடியான சூழல்களில் அமைதியை கடைபிடிக்கும் விதமாக கதாநாயகனை வடிவமைத்தது தாங்கொவொண்ணா வியப்பு. இளஞ்செழியன், யவனராணி இருவரது பயணமும் எதிரெதிர் நோக்கங்களுள்ள ஒருகோட்டு பாதையாக அமைத்தது ரசனை மிக்கது. கரிகாலச்சோழனின் இயல்பும் வீரமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அக்கால அரசியல் களத்தை நயம்பட கூறியது சாலச்சிறந்தது. இளஞ்செழியன் கோட்டை காவலர்களிடம் இருந்து தப்பிக்க யவனராணி கழுத்தில் கத்தி வைக்கும் நகர்வு அடேங்கப்பா!!! (இந்த காட்சிதான் கில்லி படத்தில் திரிஷா கழுத்தில் விஜய் கத்தி வைத்து தப்பிப்பதாக எடுத்திருப்பார் தரணி. ) இளஞ்சேட்சென்னியின் ரதம் ஓட்டும் திறமைக்கு சோழ நாட்டு மக்கள் எல்லாம் மயங்கியது சிறப்பு. யவனர்களுக்கும் நமக்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த தொடர்புகள் திகைப்பூட்டுபவையாக உள்ளது. கரிகாலச்சோழன் ஆட்சியை மீட்க தன் மக்களின் வேளாண் ஆதாரமான நீர்நிலைகளை உடைக்க மாட்டேன் என அறம் தவறாது நடப்பது , நீர்நிலைகளை இடிப்பதும் அதற்கு பதில் கல்லணை கட்டுவதும் என இளஞ்செழியன் யோசனை சொல்லுவது பலே பலே ரகம். தாயாதியான துரோகி சோழனையும் ,சேர, பாண்டிய படைகளையும் துவம்சம் செய்து ஓரிரவில் வென்று ஆட்சியை பிடிப்பது மிக சிறந்த கதை போக்கு. இறுதியில் இந்திர விழா ரதப்போட்டியில் மக்கள் இளஞ்சேட்சென்னி வாழ்க என இறந்த அரசர் பெயரை கோஷமிடுவதும் கரிகாலன் அந்த ரதத்தை ஓட்டி வந்ததும் ஒருவகையான சிலிர்ப்பை உண்டாக்கி விடும். (இது போலொரு காட்சியை பாகுபலியில் கண்டிருப்பீர்கள்). என்னதான் தான் யவன பெண்ணாக இருந்தாலும் தான் வளர்க்கப்பட்டது தமிழ் கலாச்சார முறையாதலால் தன்னை காப்பாற்றிய இளஞ்செழியனை கணவனாக மனதில் வரித்துக் கொண்டு அவன் இலட்சியத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த யவனராணி வாசகர் நெஞ்சங்களில் என்றும் வாழ்வது திண்ணம். யவன ராணி உடன் வரும் தளபதி, இளஞ்செழியனின் உதவியாளன் ஹிப்பாலஸ்,பட்டினபாக்க பரதவர்கள், இளஞ்செழியனின் காதலி, கரிகாலனின் காதலி, இரும்பிடர்தலையர், இன்னும் பல கதாபாத்திரங்களை சொல்லிக் கொண்டே போகலாம். காதல் காட்சிகளை காதல் ரசம் சொட்ட சொட்ட சொல்வதில் சாண்டில்யனுக்கு நிகர் அவரேதான் என்பது நிதர்சனம். எண்ணிலடங்காத முறை வாசித்தாலும் சலிப்பூட்டாத படைப்பாக அளித்த ஆசிரியருக்கு உளமார்ந்த நன்றிகள் பல.
❤️ 4

Comments