Para
February 3, 2025 at 04:47 AM
படித்ததில் ரசித்தது- விஜய் பிரதீப் (#8) நாவல்: கூடவே ஒரு நிழல் ஆசிரியர்: ராஜேஷ்குமார் தன் அழகான மனைவி மீது அளவுக் கடந்த காதல் வைத்திருக்கும் டாக்டர் சம்பத்தின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம ஃபோன் கால்கள் வருகின்றன. சம்பத்தின் மனைவி பிரபா, சம்பத் வீட்டில் இல்லாத போது அந்த மர்ம கால்களை எடுத்து பேசுகிறாள். இந்த நிலையில் ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸிற்க்காக பெங்களூர் சென்ற சம்பத், தன் மனைவியிடம் சொல்லாமலே மீண்டும் சென்னை வந்து விடுகிறான். அவன் சென்னை வந்த அந்த இரவு நேரத்தில் தன் வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே போவதை கவனித்த சம்பத், இந்த நேரத்தில் நம் வீட்டிற்கு வந்து செல்லும் இவன் யாராக இருக்கும் என்கிற கேள்வியுடனே வீட்டிற்குள் செல்கிறான். அங்கு பார்த்தால், பெட்ரூமில் அவனது மனைவி ஆடைகள் ஏதுமின்றி, ஊடலின் களைப்பில் நிர்வாணமாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். இதை பார்த்து நெஞ்சம் பதப்பதைத்த டாக்டர் சம்பத், அவனது ஆத்திரத்தைத் தீர்க்க அவளை கொலை செய்து விடுகிறான். அந்த நேரம் பார்த்து வீட்டின் காலிங் பெல் அடிக்கிறது. காலிங் பெல் அடித்தது யார்? இந்த கொலை நடந்த பின்னர் யாரோ ஒருவர் டாக்டர் சம்பத்தின் நிழல் போலவே பின்தொடர்கிறார், அவர் யார்?. இந்த கொலைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் ராஜேஷ்குமார் அவர்கள். இந்த நாவல் எனக்கு எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள் நடத்திவரும் படித்ததில் ரசித்தது என்கிற புத்தக மதிப்புரை போட்டியின் மூலம் அறிமுகமாகியது. பொதுவாகவே ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையை பரப்பரப்பாகவும், சுவாரசியாமாகவும் சொல்வதில் ராஜேஷ்குமார் அவர்கள் கில்லாடி, அடுத்தென்ன, அடுத்தென்ன என்று வாசகர்களை சிந்திக்க வைப்பதும், கதையில் வரும் கதாப்பாத்திரங்களை போலவே பதட்டப் பட வைப்பதும் இவருக்கு கை வந்த கலை. ஒரு கொலையை சுற்றி இத்தகைய சம்பவங்கள் தான் நடைப்பெறும் என்பதை அருகிலிருந்து பார்த்தது போலவே உண்மைக்கு மிகவும் நெருக்கமாக எழுதியிருக்கிறார். ஒரு மர்டர் மிஸ்ட்ரி வாசிக்க வேண்டும், பக்ககங்களை திருப்பக் கூடிய, விறு விறுப்பாக செல்லக் கூடிய கதையை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாவலை வாசிக்கலாம். ராஜேஷ்குமார் கண்டிப்பாக உங்களை மகிழ்விப்பார்.
❤️ 1

Comments