Let's talk with றாம்
Let's talk with றாம்
January 31, 2025 at 06:34 AM
கண்காட்சி முடிந்து இந்த மாதம் வாசித்த புத்தகங்கள் – ஜனவரி, 2025 வருடா வருடம் நண்பர்கள் இன்னின்ன புத்தகங்களை வாசித்தேன் என்ற பட்டியலைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நாமும் இப்படி குறித்து வைத்துக்கொள்ளலாமா என்று தோன்றும். ஆனால், இதுநாள் வரை அது என் வாசிப்பு முறைக்கு இயலாததாய் இருந்தது. காரணங்கள் பல. அதில் முக்கியக் காரணம் நான் நூல்களை முதல் வாசிப்பு, மறுவாசிப்பு, பல வாசிப்பு என்று வாசிப்பேன். குறிப்பாக, ஆய்வு நூல்களை, ஆய்வுக்கான தரவு நூல்களை அப்படித்தான் வாசிக்க முடியும். அதுபோல், பிடித்த கவிதைத் தொகுப்புகள், கதைகள், கோட்பாட்டு நூல்களை வாசிப்பதையும் இப்படித்தான் மேற்கொள்ள முடியும். ஆக, இப்படித் திரும்பத் திரும்ப வாசிக்கும் நூல்களை எதில் சேர்ப்பது என்று எனக்குப் புரியாது. கண்காட்சி முடிந்து அதில் வாங்கி வந்த நூல்களை ஒருதரமாவது வாசிக்க வேண்டும் என்று முடிவோடு வாசித்த நூல்களில் பட்டியல் இது. நான் புதிதாய் இல்லாமல், ஆய்வு நூல்களைத் தாண்டியும் மாதம் 1000 பக்கங்கள் வேறு வகைமைகளைப் பக்கங்கள் படித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து, பல ஆண்டுகளாகவே கடைப்பிடித்து வருகிறேன். ஆனால், ஆய்வு காலங்களில் நாவல், சினிமா சார்ந்து படிக்கக் கூடாது என்பதையும் முடிவாய் வைத்திருந்தேன். அவற்றையும் மீறி ஒரு பாடத்திட்ட உருவாக்கத்திற்காக, பல்வேறு சினிமா நூல்களைப் படிக்க வேண்டி இருந்தது. அதுபோல, கொரோனா காலத்தில் வெறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தொலைந்து போக எண்ணி வாசித்து ஒரு அலாதியான நாவல் நிச்சலனம் (அஹ்மத் ஹம்தி தன்மினார், தமிழில் தி.அ. ஸ்ரீனிவாஸன்). எந்த வகைப் பிரிவையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால், பிடித்த நூல்களை என் அருகிலேயே வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்குண்டு. அப்படி நிச்சலனத்தை எப்போதும் அருகிலேயே வைத்திருந்தேன். அந்நாவலில் காணும் பல கதாபாத்திரங்களில் என்னை நான் கண்டேன், அவர்களின் நோய்மையில் தோய்ந்தேன். பதட்டத்தில் ஆழ்ந்தேன். ‘மும்தாஜின் ஆன்மாவில் பதட்டம் ஆழ்ந்து வேலை செய்துகொண்டிருந்தது.’ என்றொரு வரி நாவலில் வரும். அது என்னைப் பற்றியது என்பது போல் நினைத்துக் கொண்டேன். நூரன், சூயத், மஸீத் பெயர்கள் என்னை அதிகமும் கவர்ந்தன. இப்பொருட்களை யாருக்காவது வைக்கலாமா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படைப்பு நிலத்தின் வீதிகளில் நடக்க வேண்டுமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டேன். இதுதான் கடந்த ஆண்டுகளில் நான் வாசித்த ஒரே நாவல் இது மட்டும்தான். இப்படியான விலக்கங்கள் இனி இல்லை என்ற காலம் இந்த 2025-ல் வரவும், என் ஆத்ம நண்பன் ஜார்ஜ் ஜோசப் மொழிபெயர்த்த ‘இஸ்மாயில்’ நாவலை முதல் நாவலாக எடுத்து முழுவதுமாகப் படித்தேன். அது பெரிய நாவல். அடுத்து, ஸ்டாலிங் ராஜாங்கம் எழுதிய எண்பதுகளின் தமிழ் சினிமா என்கிற நூலின் முதல் கட்டுரையைப் படித்து அது பேசும் அரசியலை வியந்து நின்றேன். ஆக, நான் வாசிக்காமலிருந்த நாவலையும், சினிமா சார்ந்தவற்றையும் இனி முழுவதும் வாசிக்க வேண்டும். இப்படி கலந்து வாசித்த நூல்களின் பட்டியல் இவை. இவை நிச்சயம் பரிந்துரையோ, தரப்படியலோ அல்ல. வாசித்தவை மட்டுமே. ஆனால், இவற்றுள் மோசமான நூல் ஒன்று உள்ளது. படிக்கச் சகிக்கவில்லையென்றாலும், எடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டுமாய், ஒரு தவணையாவது படித்துவிடுவோம் என்று பல்லைக் கடித்துக்கொண்டு படித்த நூல் அது. அதன் பெயரையும் கீழே தருகிறேன். அதுபோல் பாதி, பாதி, ரெண்டு அத்தியங்கள், சில கவிதைகள் என்று படித்த எந்த நூல்களையும் இவற்றில் சேர்க்கவில்லை. அவற்றை முழுமையாக வாசித்துவிட்டு அடுத்த பட்டியலில் சேர்ப்பேன். மேலும், வெளிவராத நூல்களையும் - என் விமரிசனத்திற்காக அனுப்பிய நூல்கள் பலவற்றையும் வாசித்தேன் அவை மட்டும் சுமார் 300 பக்கங்கள் இருக்கும். எனவே, இவை நீங்கலாகவே இவை. இவற்றுள் உங்களுக்குப் பிடித்த நூல் எது என்று யாரும் இப்போதைக்குக் கேட்க வேண்டாம். காரணம், யாருடைய உழைப்பையும் நான் மட்டுப்படுத்த விரும்பவில்லை. பிடித்த நூல்கள் குறித்து நானே அவசியம் தனியாக எழுதுவேன். இந்தப் பட்டியல் சும்மா ஒரு நானே திரும்பப் பார்த்துக்கொள்ள வசதியான ஒரு பட்டியல் மட்டுமே என்பதைத் திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன். இனி, நூல்களில் பட்டியல், வகைமை வாரியாக: மொழிபெயர்ப்புகள்: (விரும்பி வாசித்தவை, சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும், பெரிதும் ஏமாற்றதவை) 1. யானைகளும் அரசர்களும், தாமஸ் ஆர். ட்ரவுட்மன், தமிழில்: ப. ஜெகநாதன், சு. தியோடர் பாஸ்கரன், நாகர்கோவில்: காலச்சுவடு. வகைமை: சூழலியல், ஆய்வு. 2. இஸ்மாயில், டேனியல் குயின், தமிழில்: ஜார்ஜ் ஜோசப், திருச்சி: சீர்மை. வகைமை: நாவல். 3. குடுமி பற்றிய சிந்தனைகள், மறைதிரு இராபர்ட்டு கால்டுவெல், தமிழில் வானதி, சென்னை: Dravidian Stock. வகைமை: ஆய்வு, உரை. 4. உறங்கும் அழகிகளின் இல்லம், யசுனாரி கவபட்டா, தமிழில்: அரிசங்கர், பொள்ளாச்சி: எதிர். வகைமை: நாவல். 5. கடவுளில் இறுதி யாத்திரை, பலர், தமிழில் அசதா, சென்னை: நூல்வனம். வகைமை: நேர்காணல். கவிதைத் தொகுப்புகள் (என் இஷ்ட வகைமை) [நல்ல தொகுப்புகள்: அதிகமும், மோசமான கவிதைகள் குறைவாகக் கொண்ட தொகுப்புகளும், படிக்கலாம் என்ற தொகுப்புகள்: நல்ல கவிதைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், படிக்கலாம் ரீதியிலான கவிதைகள் அடங்கிய தொகுப்புகளும் இவை. வாசித்த வரிசையில்.] 6. அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ, சோ. விஜயகுமார், சென்னை: உயிர்மை. (நூல் குறித்து பேச படித்தது, கூடவே, இவருடைய முந்தைய இரண்டு தொகுப்புகளையும் வாசித்தேன்.) 7. நிலம் வீடு திரும்பிவிட்டது, அம்பிகா குமரன், சென்னை: வேரல். 8. மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது, மண்குதிரை, சென்னை: நின்னை. 9. புத்தனின் அரிவாள், அ. நிலாதரன், நாகப்பட்டிணம்: கொம்பு. 10. வரலாற்றின் மீது கவிழ்ந்து கிடப்பவன், சூ. சிவராமன், சென்னை: சால்ட். 11. நினைவாலணையும் முகம், க. மோகனரங்கன், சென்னை: தமிழினி. 12. தேதியற்ற மத்தியானம், தேவதச்சன், சென்னை: தேசாந்திரி பதிப்பகம். பிற: [இரண்டு நூல்களையும் சும்மா பார்க்கலாம் என்று எடுத்தவைதான். ஆனால், என்னை ஆச்சரியப்படுத்தின. நான் படிக்கும் முதல் கிராஃபிக் புத்தகமே வாடிவாசல்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், மூன்று நூல்களுள் ஒன்றான அடுத்து குடும்ப மதுவிலக்கு சாஸ்திரம் என்னை அதிகமும் வியப்பில் ஆழ்த்தியது; இதை ஒட்டிய தேடுதலில் குறு நூல்களான, மதுவிலக்கு பாட்டு, மகா மதுரகவி வி.வி. முருகேச பாகவதர் இயற்றிய மதுவிலக்கு கீர்த்தனம் ஆகிய நூல்களை இணையத்தில் தேடி வாசித்தேன்.] 13. வாடிவாசல். கிராஃபிக் வடிவம். சி.சு. செல்லப்பா. வரைகலையாக்கம்: பெருமாள்முருகன், அப்புபன், நாகர்கோவில்: காலச்சுவடு. 14. மதுவிலக்குக் கும்மி, குடும்ப மதுவிலக்கு சாஸ்திரம், மதுவிலக்கம், பதிப்பாசிரியர்: ஞா. குருசாமி, சென்னை: பரிசல். மோச நூல் (பணம் விரயம் செய்ய விரும்புபவர்கள் மட்டும் வாங்கலாம்) 15. மதுரை மீனாட்சி உண்மை வரலாறு (இந்த துணைத் தலைப்பாலாதாண்டா ஏமாந்தேன்) டார்வின், சென்னை: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்) - றாம் சந்தோஷ் வடார்க்காடு (சண்முக. விமல் குமார்) ஜனவரி, 31, 2025.

Comments