Arappor Iyakkam
Arappor Iyakkam
February 25, 2025 at 04:13 AM
*தமிழ்நாடு தகவல் ஆணையமா அல்லது தகர டப்பா ஆணையமா??* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதுகெலும்பு தகவல் ஆணையம். ஆனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தேங்கி இருக்கும் 48,000 வழக்குகள் குறித்தும், தகவல் ஆணையத்தின் மோசமான செயல்திறன் குறித்தும், அதை சீர் செய்யக் கோரியும், கூடுதல் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட கோரியும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் தலைமை செயலாளர் , நிதித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், மனித வளத்துறை மேம்பாடு துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை ஆணையர் அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒரு நபர் தகவல் கூறிய பின்பு 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்காவிட்டால் முதல் மேல் முறையீடு அதே துறையில் செய்யலாம் முதல் மேல்முறையீட்டில் 30 நாட்களுக்குள் (அதிகபட்சமாக 45 நாட்களுக்குள்) தகவல் கிடைக்காவிட்டால் இரண்டாம் வேல்முறையீடு தகவல் ஆணையத்தில் செய்யலாம். ஆனால் இரண்டாம் முறையீடு செய்த பின், எத்தனை நாட்களுக்குள் அவர்கள் வழக்கு தகவல் ஆணையத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற காலகட்டம் சட்டத்தில் இல்லை. தாமதிக்கப்படும் தகவல் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட தகவலாகவே கருதப்பட வேண்டும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்ட தகவல் கிடைப்பதில் பெரும்பாலும் பயன் இல்லை. RTI மற்றும் முதல் மேல் முறையீடு போலவே இரண்டாம் மேல்முறையீட்டிலும் 30 நாட்களுக்குள் வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது RTI பயன்படுத்துபவர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. செப்டம்பர் 2024 படி கிட்டத்தட்ட 48000 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தமிழ்நாடு தகவல் ஆணையம் இணையதளத்தில் இருந்து தெரிகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் தற்பொழுது விசாரித்து வரும் வழக்குகளை பார்த்தால் பெரும்பாலும் 2022 மற்றும் 2023 விண்ணப்பித்த இரண்டாம் மேல் முறையீடாக உள்ளது. உதாரணத்திற்கு டிசம்பர் 2024 இல் தமிழ்நாடு தகவல் ஆணையம் மொத்தம் 1317 இரண்டாம் மேல்முறையீடு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. அதில் 8 % வழக்குகள் 2021 அல்லது அதற்கு முன்பாக இரண்டாம் மேல் முறையீடு பதிவு செய்யப்பட்ட வழக்குகள். அதாவது வின்னப்ப்த்தவர்கள் வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பிற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்துள்ளனர். 47% வழக்குகள் 2022 ல் பதிந்தவை. இதன் அர்த்தம் 47% விண்ணப்பதாரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் விசாரணைக்காக காத்திருந்துள்ளனர். 33% வழக்குகள் 2023ல் பதிந்தவை மற்றும் இந்த விண்ணப்பதாரர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் விசாரணைக்காக காத்திருந்துள்ளனர். வெறும் 11% விண்ணப்பதாரர்களே 2024 பதிந்தவர்கள் மற்றும் இவர்களுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு பதிவு செய்பவர்களுக்கு சராசரியாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஜனவரி 2025-ல் விசாரிக்கப்பட்ட வழக்குகளை பார்க்கும் பொழுது அதுவும் இதே போல் தான் உள்ளது. மேலும் ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை விசாரித்த கிட்டத்தட்ட 14000 வழக்குகளில் 1% க்கும் குறைவான வழக்குகளிலேயே அபராதம், நிவாரணம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை பரிந்துரைத்து உள்ளது தகவல் ஆணையம். தகவல் தராத அதிகாரிகளை தண்டிக்கவும் தகவல் ஆணையம் தயாராக இல்லை என்பது தெரிகிறது. எனவே இவை அனைத்தும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மோசமான செயல் திறனை குறித்து நமக்கு தெரிவிக்கிறது. என்ன செய்ய வேண்டும் ? 1. தகவல் ஆணையர்கள் சோம்பேறித்தனத்தை விட்டு தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். 2. இரண்டு தகவல் ஆணையர்கள் பதவி ஒரு வருடமாக நியமிக்கப்படவில்லை. உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். 3. இதை தவிர சட்டத்தில் இடமுள்ள கூடுதல் 4 தகவல் ஆணையர்கள் நியமனங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற சொன்ன வழிமுறைகள் என்ன? தமிழ்நாடு அரசு செய்தது என்ன ? விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் ! https://youtu.be/NrXcJ0tEXCA?si=71ywrtexgdk0d_BD
👍 3

Comments