Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
February 20, 2025 at 01:14 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️* *6. மனதின் அடித்தளம் இறைநிலை* _(நேற்றையத் தொடர்ச்சி)_ இந்தக் கவியின் மூன்றாவதும் நான்காவதுமாகிய அடிகளைக் கூர்ந்து படித்துப் பார்ப்போம். _*“கலையுணர்வால் மெய்ப்பொருளாம் கண்காணா ஒன்றினைக்*_ _*கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே*_ _*சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்*_ _*சிக்கியுள்ளவரை உண்மைநில விளங்காதுணர் வோம்”*_ மெய்ப்பொருளாகவும், இருப்பு நிலையாகவும், சுத்தவெளியாகவும் உள்ள இறைநிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலில்லாத குழந்தை வயதிலும், அந்த அரூப நிலையை யூகித்து உணர்ந்து கொள்ள ஏற்ற சிந்தனையாற்றல் உயராத மக்களுக்கும் தெய்வ நம்பிக்கையூட்டி அறிவுக்குப் பிடிப்பு கொடுப்பதற்காக, கண், காது, மூக்கு, முகம் உடைய உருவங்களைக் கற்பனை செய்து காட்டியும், அக்கற்பனை உருவங்களைக் கண்ணால் பார்க்கத்தக்க சிலைகளாகக் காட்டியும், பக்தி வழியில் கடவுள் என்று மனித மன இயல்பு அறிந்த பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள். நாம் எல்லாரும் நமது அறிவால் அத்தகைய வடிவங்களை நினைத்து நினைத்து அதுதான் தெய்வம் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பழகியிருக்கிறோம். அந்தப் பழக்கம், தெய்வம் என்று எண்ணும்போதே நமது அறிவு அந்த சிலை வடிவமாகவோ, கற்பனை உருவங்களாகவோ வடிவம் எடுத்துக் காட்சியாகவும், சாட்சியாகவும் அமைகிறது. எந்த அறிவு ஒடுங்கி அரூபமாக, எல்லையற்றதாகத் தன்னை விரித்து இருப்பு நிலையடைந்து இறையுணர்வும், அறிவறியும் பேறும் பெற வேண்டுமோ அதுவே தன்னை மாற்றி அமைத்துக் கொண்ட நிலையில் அழுத்தமாக நின்றால் எவ்வாறு அரூபமான தன்னையறியவும், அதுவே அகண்டாகார இருப்பு நிலையாக உள்ள இறைநிலையை உணரவும் முடியும்? மனம் எல்லைகட்டி வடிவம் எடுத்தும், குணங்களாக மாறியும், அலையாக இயங்கும் நிலையிலிருந்து பயிற்சியால் அது நிலைத்து இருப்பு நிலையாக மாறும் அகத்தவப் பயிற்சியில் முழுமை பெற்றாலன்றி அறிவு தனது உண்மை நிலையை உணர்வது முடியாது. உளப் பயிற்சியால் மன அலை நிலைகளைத் தாண்டி மெய்ப்பொருள் உணர்ந்த மகான்களில் ஒருவரான அழுகண்ணி சித்தர் அவர் அனுபவமாய்ப் பெற்ற உண்மையினை ஒரு கவியில் கீழ்கண்டபடி உணர்ந்த்துகிறார். _“காட்டானை மேலேறிக் கடைத் தெருவே போகையிலே_ _நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ_ _நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்_ _காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண் குளிரப் பாரேனோ”_ இங்கு காட்டான் என்றால் தனது இருப்பைப் புலன்களுக்குக் காட்ட மாட்டான் என்று பொருள். அதாவது அரூப நிலையானவன். அவ்வாறு அறிவும், அரூபம்; இறைநிலையும் அரூபம்தான். ஏனெனில் இறைநிலை அறிவுமாக இருப்பதனால். காட்டானாகிய அறிவு ஐந்து புலன்களில் இயங்கிப் பெற்ற பதிவுகளைத் தாண்டி பஞ்சபூதங்களாகிய பேரியக்கத் தோற்றங்களைக் கடந்து கடைசி நிலையான மெய்ப்பொருளை நாடி, அதையறிய முயற்சிக்கும் போது உலக வாழ்க்கையிலே பெற்ற அனுபவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு உருவங்களோடும், குணங்களோடும் தோன்றுகின்றன. எனது இறைநிலை நோக்கிய அறிவின் பயணத்தில் காணும் இந்தக் குறுக்கீடுகளை நினைத்துப் பார்க்கிறேன். எங்களையெல்லாம் விட்டு விட்டு அல்லது தாண்டி நீ போக முடியுமா என்று ஏளனம் செய்து சிரிப்பது போல இருக்கின்றது. என்றாலும் எனது நிலையை அரூபமாக உள்ள இறைநிலையை உணர்ந்து கொள்வேன் என்று கூறுவதே இக்கவியின் பொருள். எனவே மனமானது வாழ்வின் அனுபவங்களால் முன்னம் எடுத்த வடிவங்கள், குணங்கள் அனைத்தையும் அலையாக எழும்பி இயங்கும் போக்கிலிருந்து அவ்வலைகளை நிறுத்தி, நிலைக்கு வந்தால், அந்த நிலையே அனுபவமாக அறிவாகவும், இறைநிலையாகவும் எளிதில் உணர்ந்து முழுமை பெறலாம் என்பதே இக்கவியின் கருத்தாகும். *அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்* *- வேதாத்திரி* (காந்த தத்துவம் – “7. உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்” நாளை தொடரும்) ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 3

Comments