Vethathiriya Gnanakkudil
February 21, 2025 at 01:42 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️*
*7. உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்*
_*காந்தநிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே*_
_*கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்*_
_*மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளி சுவை மனம்*_
_*மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்*_
*_சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட_*
_*சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன்உளம்*_
_*வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொதுஇது*_
_*விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே*_
*விரிவுரை*
இயற்கை வளங்களை கைத்திறனாலும், அறிவின் கூர்மையாலும் வாழ்க்கை வளம் தரும் பொருட்களாக மாற்றித் துய்த்து சமுதாயக் கூட்டு முறையிலே வாழ்வை நடத்தி வரும் இனத்திற்கு இறைவழிபாடும், அறநெறியும் இன்றியாததாகும். இறையுணர்வும் அறநெறியும் இயல்பாக வாழ்வில் செயலாக மலர்வதற்கு அறிவின் முழுமைப்பேறு அவசியம். அறிவின் முழுமைப்பேறு அடைவதற்கு எல்லாம்வல்ல பூரணப் பொருளான இருப்புநிலை (இறைநிலை) அதன் பகுதி நுண்ணியக்க நிலையான விண் (உயிர்) விண் சுழலிலிருந்து வீசிக் கொண்டேயிருக்கும் விரிவலை இருப்புநிலையோடு ஒன்று சேர்ந்து அமையும் காந்தம், ஆகிய மூன்று மறை பொருட்களையும் ஐயமின்றி உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறான மறைபொருட்களை குழந்தை வயதாலோ, சிந்திக்கும் ஆற்றல் உயராத காரணத்தாலோ தெரிந்து கொள்ள முடியாதவர்களை மறைபொருள் விளக்கம் பெற்றவர்கள் வாழ்வில் வழி நடத்த வேண்டும் பக்தி வழியால்.
மனித இனம் கற்காலம், நெருப்புக் காலம், உலோகக் காலம், மின்சக்தி காலம் ஆகிய பல கால கட்டங்களைக் கடந்து இன்று அணுயுகத்திற்கு வந்துள்ளது. மனித இன வாழ்க்கையில் பலப்பல மாற்றங்கள் உண்டாகிவிட்டன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எண்ணிறந்த பொருட்கள் அனுபோகத்திற்கு வந்து விட்டன.
விரைவான வாகன வசதிகள் பெருக்கத்தாலும் உலக முழுமைக்குச் செய்திகள் விரைவாகப் பரவச் செய்யும் விஞ்ஞான சாதனங்களாலும், வானில் சூரியன்கள் முதலாக குறுங்கோள்கள் அமைப்பு, அவற்றின் முறையான ஓட்டம், அவற்றிலிருந்து வீசும் காந்த அலைகள் விளைவுகள், இவற்றையறியும் கல்வி வசதி பெருக்கம், இவற்றால் உலக மக்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக ஒன்றுபட்டிருக்கிறார்கள். இந்த கால நிலைமைக்கேற்ப பொருளாதாரம், அரசியல், மதம், கல்வி முறை, வாழ்க்கை நெறி இவற்றில் மக்கள் குல அறிவு மேலோங்கி ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ வேண்டியது இன்றியமையாததாகி விட்டன.
இத்தகைய ஒருங்கிணைந்த அறிவோடு மனிதன் பிறரோடு பிணக்கு, பகை, போர் இன்றி அன்போடு வாழ வேண்டுமானால் இயற்கையமைப்பால் எல்லா உயிர்களையும் ஒன்றிணைத்துக் காட்டக்கூடிய மெய்ப்பொருளாகிய இறைநிலையையும், அதன் நுண்பொருளையும் அந்த நுண்பொருளின் சுழலையிலிருந்து விரிவலையாகப் பரவி இருப்பு நிலையோடு சேர்ந்து பேரியக்கக் களப் பொருட்கள் அனைத்திலும் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்ற ஆறு சிறப்பாற்றல்களாக விரிந்து செயலாற்றும் காந்தம் எனும் பேராற்றலையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றும் புலன்களுக்கு எட்டாத மறைபொருள் எனினும் ஆறாவது நிலை அறிவால் உணர்ந்து கொள்ளக் கூடியவையே.
இறைநிலையை மனிதன் உணரவில்லையானால், தான் பேரியக்க மண்டல ஆற்றல்களிலிருந்தும், விரிந்த சமுதாயத்திலிருந்தும் வேறுபட்டிருப்பதாகக் கருதிக் கொண்டு பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் இவற்றில் தான் உயர்ந்துள்ள அளவில் தன்முனைப்பு கொண்டு அந்த தன்முனைப்பு எனும் மன எழுச்சி தனக்கு மற்றவரை அடக்கி யாளும் எண்ணமான “தான்” என்றும் தனக்கு சொந்தமான பொருட்கள் மக்கள் கூட்டு இவற்றிற்கேற்ப “தனது” என்றும் இருவகை எண்ணக் கோடுகளாக விரிவு பெறுகின்றன.
(காந்த தத்துவம் – “7. உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்” நாளையும் தொடரும்)
*அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்*
*- வேதாத்திரி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
2