Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
February 22, 2025 at 01:22 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️* *7. உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்* _(நேற்றையத் தொடர்ச்சி)_ இந்த தான், தனது எனும் எண்ணக் கோடுகளின் இணைப்பால் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற ஆறு குணங்களாகவும் இக்குணங்களின் விளைவாக பொய், சூது, கொலை, களவு, கற்பழிவு எனும் ஐந்து பெரும் பழிச்செயல்கள் மனிதனிடத்தில் தோன்றி தனக்கும், பிறர்க்கும், அவ்வப்போதும், பிற்காலத்துக்கும், உடல் நலத்திற்கும், மனவளத்திற்கும் துன்பங்களை விளைவித்தும், வாழ்க்கையில் சிக்கல்களைப் பெருக்கிக் கொண்டும் இருக்கிறான். உயிர் எனும் விண்ணின் தன்மையறியாததால், அவ்விண்ணின் மையத்தமைந்த மெய்ப்பொருளே அறிவாகி அதன் படர்க்கை நிலையில் மனமாக விளங்குவதையும் அதிலிருந்து தோன்றும் விரிவலை காந்தமாக சிறப்படைந்து, உடலையும், மனதையும் நடத்திவரும் சீர்மையையறிய முடியாது. அதனால் அதனை மதிப்போடு போற்றிக் காத்து வாழ்க்கை இன்பத்தை முறையோடும், அளவோடும் துய்த்து நிறைவு பெற முடியாது. காந்த நிலை உணராது போனால் இயற்கையிலும், செயல் விளைவாகவும் எவ்வாறு அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் இவை பிறக்கின்றன என்று கண்டு அறிவின் விழிப்போடு செயலாற்றும் அறநெறி மனிதனுக்கு இயல்பாக மலராது. எனவே இறைநிலை, உயிர் நிலை, காந்தநிலை மூன்றையும் தெளிவாக தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலமே உணர்ந்து மனிதன் வாழ்க்கையில் சிறப்பும், அமைதியும் இன்பமும் அடைய வேண்டுமெனில் காந்த தத்துவ ஞானம், சிந்திக்கும் ஆற்றலுள்ள அனைவருக்கும் இன்றியமையாதது. பேரியக்க மண்டல இயக்கங்களுக்கெல்லாம் மூலப் பேராற்றலான இருப்பு நிலையான சுத்தவெளி உள்ளடங்கிய ஆற்றலால் பிளவுபட்டு நுண்ணியக்க சுழலலையான விண்ணாகி, விண்ணிலிருந்து எழும் விரிவலையாகி, அவ்விரிவலையே இருப்பு நிலையோடு கலப்புற்று பேரியக்க மண்டல முழுவதும் வான்காந்தமாகவும், சீவ இன உடல்களில் சீவகாந்தமாகவும் ஒரே மறைபொருள் எனும் பூ நான்கு இதழ்களாக விரிந்தும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாதபடி இணைந்தும் இயங்கும் இயற்கையான பரிணாம நியதியை விளக்கும் காந்த தத்துவத்தை உணர்ந்து கொண்டால் அந்தத் தெளிவிலே கடவுள், மனம் என்ற இரண்டு மாபெரும் உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். கடவுள் என்ற இருப்பு நிலையாகிய வெளியும், அதன் ஆற்றல் அறிவாக விளங்கும் உயிரையும், அவ்வறிவே படர்க்கை நிலையில் மனமாக இயங்கும் திருவிளையாடல்களை அருள் நடனமாகக் காணலாம் என்பதை இக்கவியின் முதல் அடி விளக்குகிறது. காந்த தத்துவம் உணர்ந்தால்தான் உடலில் உற்பத்தியாகும் சீவகாந்தமானது எவ்வாறு அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் இவையாகாத் தன்மாற்றம் பெறுகிறது; அதன் விளைவாக இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்ச்சிகள் தோன்றுகின்றன எனத் தெரிந்து அவற்றைப் போற்றிக் காத்து வாழ்வில் நலம் காக்க முடியும் என்பதை இரண்டாவது அடி விளக்குகிறது. இந்த ஞானம் பெறுவதற்கு உனது மனதை அமைதி நிலைக்குக் கொண்டு வந்து சிந்தனை செய்தால்தான் உன் மனமே இந்த காந்த தத்துவத்தை விளங்கிக் கொள்வதோடு மனமே அதற்கு சாட்சியாகவும் அமையும் என்பதை மூன்றாவது அடி விளக்குகிறது. இந்த காந்த ஞானம் ஆட்சியாளர்கட்கும் வேண்டும்; வேதாந்திகள், மதத் தலைவர்கள் இவர்களுக்கும் அவசியம்; பொருட்களை உற்பத்தி செய்து சமூகத் தொண்டாற்றும் வணிகருக்கும் இன்றியமையாதது. ஏனெனில் மனித வாழ்வு, அரசியல், மதம், பொருளாதாரம் என்ற மூன்றடுக்கு நிர்வாகத்தினால் நடைபெறுவதால் வாழ்க்கையை விளக்கும் ஆட்சியாளர்கள், மதத் தலைவர்கள், பொருள் துறை நிபுணர்கள் இவர்களுக்கும் இன்றியமையாதாது என்று நான்காவது அடி எடுத்துக் காட்டுகிறது. (காந்த தத்துவம் – “8. இறையுணர்வால் அறநெறி தழைக்கும்” நாளை தொடரும்) அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன் *- வேதாத்திரி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 1

Comments