
Vethathiriya Gnanakkudil
February 25, 2025 at 02:00 AM
*வாழ்க்கை மலர்கள்: பிப்ரவரி 25*
*சிக்கலும் தீர்வும்*
வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள்தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. எப்படி எனப் பார்க்கலாம். அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை.
தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதிகளாகவும், வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம் முன் எழுந்து நிற்கின்றன.
அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும் மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் உருளும் வாழ்வு எனும் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் “நான்” யார் என்று தெரிவதில்லை. என் மூலமென்ன? என் முடிவென்ன? என்பதை விளங்கிக் கொள்வதில்லை. தன்னிலை விளக்கம் பெற வேண்டும் என்று கூடத் தெரிவதில்லை. அதன் விளைவாக, வாழ்வின், பிறவியின் நோக்கமாகிய வீடு பேறு என்ற உன்னதமான லட்சியத்திற்கு இசைவான வகையில் வாழும் முறையை அமைத்துக்கொள்ளாமல், அந்த லட்சியத்திற்கு இடையூறாக, எதிரிடையாக என்னென்ன வழிகள் உண்டோ அப்படியெல்லாம் வாழ்வதால் அந்த முரண்பாடே வாழ்க்கைச் சிக்கலாக முளைக்கிறது. தன்னிலை விளக்கம் பெற்று லட்சிய வாழ்வு வாழ்வோம்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
2