Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
March 1, 2025 at 06:48 AM
🦉வரும் 3-ம் தேதி தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: 3,000 தேர்வு மையங்கள் தயார். பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு வரும் 3ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 3ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இதையடுத்து 5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்க இருக்கிறது. முன்னதாக பிளஸ் 2க்கு பிப்ரவரி 2ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் செய்முறைத்தேர்வுகள் நடந்தன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவியர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பேர் மாணவியர். சிறைவாசிகள் 145 பேர் எழுத உள்ளனர். இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் முன்னதாக 9 மணி அளவில் தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும். ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகள் தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. தேர்வு அறைகளில் தொடர் மின்சாரம் வழங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவ, மாணவியர் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வரும் 3ம் தேதி தேர்வு தொடங்க உள்ள நிலையில், 3316 தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது.

Comments