Jothimani MP
June 2, 2025 at 10:06 AM
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக செய்திக் குறிப்பு
கரூர் ரயில் நிலையத்திலிருந்து கரூர்- திருச்சி (76810) , செல்லும் டெமோ ரயிலில் இரண்டு மணி நேரப் பயணத்தில் ,கழிப்பறை வசதியின்றி பயணிகள் அவதிப்படுவதை திரு. பரணிக்குமார் என்னும் பயணி எனக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தார்.
இதனை ரயில்வே வாரியத் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று டெமோ பெட்டிகளை கழிப்பறை வசதிகள் கொண்ட ஐ.சி.எப் பெட்டிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிகையை ஏற்று ரயில்வே வாரியத் தலைவர் திரு. சதீஷ் குமார் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கரூர்- திருச்சி (76810) மற்றும் கரூர் - சேலம்( 76822) ரயில்களில் கழிப்பறை வசதிகள் கொண்ட பெட்டிகளை இணைக்க உத்தரவிட்டார். இதுகுறித்து மீண்டும் ரயில்வே வாரியத் தலைவர் அவர்களைச் சந்தித்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நன்றி தெரிவித்தேன்.
அதனையொட்டி,இன்று (02.06.2025) காலை கரூர் ரயில் நிலையம் சென்று கரூர்- திருச்சி, கரூர் சேலம் டெமோ ரயில்களை நேரில் ஆய்வு செய்து,பயணிகளுடன் கலந்துரையாடினேன்.
தாங்கள் பயணம் செய்யும் ரயிலில், கழிப்பறை வசதியின்றி தினந்தோறும்,
அவதிப்பட்டு கொண்டிருந்த பயணிகளின் முகத்தில் சந்தோஷத்தை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
இந்த ரயில்களை தினமும் இரண்டாயிரம் பேர்களுக்கும் மேலாகப் பயன்படுத்துகின்றனர். பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகளின் எளிய முயற்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கும் போது செய்யும் பணியில் திருப்தியும், உத்வேகமும் கிடைக்கிறது.
செ. ஜோதிமணி எம்.பி.