
Let's talk with றாம்
May 23, 2025 at 07:37 AM
”எழுத்துக்குக் கிடைத்த சன்மானம்”
றாமானந்த சித்தருக்கு ராயல்டி என்று ஐரோப்பியத் துரைமார் பாஷையில் சொல்லப்படும் ’ஒருவரின் எழுத்துக்குத் தரக்கூடிய சன்மானத் தொகை’யினைத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வாங்கிவிட வேண்டும் என்று ரொம்பவே ஆசை ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் அத்தொகையினைப் பெறவோ புஸ்தகம் தேக்கமடையாமல் விற்றுத் தீர வேண்டும் என்ற நிபந்தனை அவர் முன் இருந்தது; துர்பலனாய், அவர் எழுதும் எந்தப் புஸ்தகமும் அவர் நினைத்த அளவு கீர்த்தி பெறவில்லை. ஒருநாள் அவருக்கு இப்படியான ஒரு யோசனை வந்ததும் உடனே அதற்கு செயல் வடிவமும் தந்தார்:
’நண்பர்களே எனக்கொரு ஆசை வந்துவிட்டது. அதை எப்படியும் நிறைவேற்றாமல் போய்விட்டால் எனக்கு மோட்சம் கிடைக்காது. அதனால் என் அபிமானத்திற்குரிய சிநேகிதர்களாகிய தாங்கள், தங்களால் இயன்ற பொருளுதவியை அளித்து எனக்கு உபகாரம் பண்ணுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என்று எல்லோருக்கும் கடுதாசி அனுப்பினார்.
அவர் எதிர்பார்த்திராத அளவுக்கு அவருக்கு உதவிகள் கிடைத்தன. அச்செய்தியினை தானே நம்ப இயலாதவராய் இருந்தார்; என்றாலும், உடனடியாக தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, வந்தத் தொகை போதாதென்று, மேலும் சில காசுகளுக்குத் தன்னிடம் இருந்த சில பண்டங்களையும் விற்கலானார்.
அவற்றை மொத்தமாகக் கொண்டு போய், புஸ்தக விற்பனா நிலையத்தில் கொடுத்து, விற்காமல் இருந்த பல நூறு படிகளைத் தானே விலை கொடுத்து வாங்கினார்.
உடனே கையோடு, பிரசுராதிபதியிடம் போய், “ஐயா! நான் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் பொன் போல் விற்றுவிட்டன; எனவே, எனக்குத் தரவேண்டிய சன்மானத்தொகையை உடனே தந்து என்னைப் போன்ற மகாசாகித்யாதிபதியைத் தக்கவைத்து கொள்ளும்!” என்று கட்டளை இட்டார்.
பிரசுராதிபதியும் வந்தவரை லாபம் என்று மறுபேச்சு இல்லாமல், உரியத் தொகையினைக் கொடுத்தனுப்பினார். தொகையினைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய போதுதான் சித்தர் பெருமானுக்கு இங்ஙனம் உரைத்தது: ‘பேசாமல் நண்பர்கள் தந்த பணத்தைக் கொண்டு கொஞ்ச நாளைக்கு ஜபர்தஸ்தாய் வாழ்ந்திருக்கலாம்!’
- றாமானந்த சித்தர் அருளிய குல்லா கதைகள்
நன்றி: உயிர்மை இணைய இதழ்
ஓவியம்: அக்ஷ்யா செல்வராஜ்