
தமிழர் மருத்துவம்🍎
June 6, 2025 at 09:10 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -1
உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.
அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை பார்ப்போம் .
இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர். இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி 5. உடல் சுத்தி என்பனவாகும்.
உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன.
எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும். காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பாஷாண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒளஷதங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒளஷத முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை.
எனவே அந்நிலையை அடைந்த சித்தபுருஷர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது. ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.
எனவே அந்நிலையினை அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடித்தே ஆக வேண்டும்.
இனி நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப் பற்றித் தெளிவாகக் காண்போம் . முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் பார்ப்போம் . இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.

👍
1