
தமிழர் மருத்துவம்🍎
June 8, 2025 at 01:12 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -3
நேத்திர சுத்தி
முகம் முழுவதும் மூழ்கும் அளவிலான ஒரு மண்பாண்டத்தை வாய் அகன்றதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அந்தப் பாண்டம் முழுவதும் நல்ல சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும்.
காலையில் எழுந்து தந்த சுத்தி செய்வதற்கு முன்பாக அந்த நீரில் 5 பன்னீர்ப்பூக்கள் அல்லது 5 நந்தியாவட்டம் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும்.
தந்த சுத்தி செய்து முடித்தபின்பு அந்த மண்பாண்டத்தில் உள்ள குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு அமிழ்த்திக் கொண்டு கண்களை நன்கு விரியத் திறந்து கண்விழியினை வலமிருந்து இடமாக 5 முறையும், இடமிருந்து வலமாக 5 முறையும் சுழற்றி பின் 5 முறை இமைகளை மூடி மூடித் திறந்தும்
அதன்பின் சற்றுநேரம் கண்களை அசைக்காமல் திறந்தபடியும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது சுவாசத்தை நிறுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் முகத்தை வெளியில் எடுத்தும் செய்யலாம்.
செய்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இது மிகவும் அரிய பயிற்சியாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் உண்டாகும் அழுக்குகள், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களின் அழற்சி முதலியவை நீங்கி கண்களின் உட்புறம் உள்ள மிகவும் நுண்ணிய நரம்புகள் குளிர்ச்சியடைந்து கண்கள் மிகவும் பிரகாசமடைவதுடன் குளிர்ந்து காணப்படும்.
இதைச் செய்வதால் தீவிரமாக அப்பியாசம் செய்யும் போது கண்களில் ஏற்படும் அதிக எரிச்சல், இமைகள் துடித்தல், கண் இமை ஓரங்களில் ஏற்படும் அதிக வலி ஆகிய உபாதைகள் நீங்கும். மேலும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் கண் மறைவு நீங்கும்.
இந்த முறையில் பன்னீர் மற்றும் நந்தியாவட்டம் பூக்கள் கிடைக்காவிட்டால் வெறும் தூய்மையான நீரை மட்டும் பயன்படுத்தலாம். இந்த நித்திய சுத்தி முறையில் கூறப்படும் நேத்திர சுத்தி முறையினை சாதாரணமாக சம்சார வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் யோக சாதனையை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் இதைச் செய்தாக வேண்டும். கிரியா எனும் யோக விஞ்ஞானத்தின் பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் இந்த நித்திய சுத்தி முறைகளை தெளிவாக அறிந்து பின்பற்ற வேண்டும் .
இனி அடுத்ததாக பல பெரிய யோகிகள் கூட அறிந்திராத அதே சமயம் மிகவும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கப சுத்தி முறையானது கூறப்படுகிறது.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

🙏
1