
Aanthai Reporter News Channel
June 13, 2025 at 02:36 AM
🦉 இதே ஜூன் 13., ,,1987
வி. கணபதி அய்யர் காலமான தினமின்று 😰
இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர். 'பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என்று அக்காலக் கணித உலகில் சிறப்பாக அறியப்பட்ட கணபதி அய்யர் அவருடைய எளிமையான நடை உடை பாவனையாலும் மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதை.
பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் உள்ளடங்கிய எல்லா கணிதப் பிரிவுகளிலும் இடவியல் என்ற இருபதாவது நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவிலும் அவர் ஆழம் மிகுந்த 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உலகமறியப் போற்றப் பட்டவர். கணிதப் பாருலகுக்கு 15 இந்திய மாணவமணிகளை முனைவர் பட்டம் பெற பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் கணித உலகுக்குப் பயனுள்ள சேவை செய்யக் காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தவர்.
கணிதமோ, வேதியியலோ, இயற்பியலோ, எந்த விஞ்ஞானத் துறையிலும் தான் திறமை பெற்ற உட்துறையில் தான் எந்த சராசரிப் பேராசிரியரும் முனைவர்பட்டப் படிப்புக்குத் தன்னிடம் வரும் மாணவர்களை ஊக்குவித்து ஆய்வு செய்விப்பது வழக்கம். ஆனால் கணபதி அய்யர் ஆய்வாசிரியர்களுக்கே ஒரு முன்னோடியாக இருந்தவர். அவரிடம் சென்ற மாணவர்கள் கணிதத்தில் எந்த உட்துறையிலும் ஆய்வு செய்யலாம். அவருடைய வழிமுறையினால் அவருடைய ஆய்வு மாணவர்கள் அகலமும் ஆழ்வும் நிறைந்த ஆய்வுத்திறன் பெற்றவர்களானார்கள்.
முனைவர் படிப்புக்குரிய மாணவன் தன் மனதிற்கிசைந்த உட்துறையில் ஓரிரண்டு நூல்களை ஒரு மாதம் ஊன்றிப்படித்தபிறகு அவரிடம் தன் ஐயங்களைத்தெளிந்து கொள்வதற்காகச்செல்கிறான். அவன் சொல்வதையெல்லாம் நிதானமாகக்காது கொடுத்துக்கேட்பார். கால் மணி அல்லது அரை மணியில் அவன் தனக்குத்தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடுவான். அவையெல்லாம் அவருடைய ஆய்வுத் துறைகளுக்குத் துளிக்கூட சம்பந்தமில்லாததாகவே இருந்தாலும், அவர் இதற்கு முன் பார்க்காத நூல்களிலிருந்து மாணவன் பேசிக்கொண்டிருந்தாலும், அவர் நன்றாகவே புரிந்து கொள்வார்.பிறகு சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்திருப்பார். ஓரிரண்டு கேள்விகள் தான் கேட்பார். அவன் சொல்லும் அரைகுறை பதில்களையும் கேட்டுக்கொள்வார். பிறகு அவர் ஒரு நீண்ட சொற்பொழிவே செய்வார். அவர் பார்க்காத இந்த புது உட்துறையில் இன்னும் என்னென்னவெல்லாம் ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கும், இதற்காக இன்னின்ன நூல்களைப் படிக்க வேண்டியிருக்கும், உலகில் இத்துறையில் என்னென்ன இன்னும் பிடிபடாமல் இருக்கின்றன, இத்துறைக்கும் கணிதத்திலோ கணிதத்திற்கப்பாலோ உள்ள மற்ற துறைகளுக்கும் வருங்காலத்தில் உறவுகள் எப்படி பிணைக்கப்படலாம் என்றெல்லாம் அவரே அதில் ஆய்வு செய்து கரைகண்டவரைப்போல் பேசுவார். இந்த அளவுக்கு எந்த புது விஷயத்தையும் உள்வாங்கி அதைப்பற்றி மேலும் ஆக்கமுறையில் பேசக்கூடிய கணித ஆய்வாளர்கள் உலகிலேயே மிகக்குறைவானவர்கள் என்பதே அவர் காலத்திய மற்ற பேராசிரியர்களுடைய தீர்மானம்.
