Erode Kathir
Erode Kathir
June 14, 2025 at 06:44 AM
விமான விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் குறித்து நிறையப் பேசப்படுகின்றன. விமானி இறுதியாகத் தந்தையிடம் தந்த வாக்குறுதி, குடும்பமாக குடியேறச் சென்ற தம்பதி மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய செல்ஃபி, விமானப் பணிப் பெண் இறுதியாகக் குடும்பத்திற்கு அழைத்தது, மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்த கணவன் என நிறைய உணர்வுப்பூர்வமான பகிர்வுகள். மனம் கனக்கச் செய்வது உண்மைதான். இவையாவற்றுக்கும் முத்தாய்ப்பாய், ஒவ்வொருவருக்கும் ‘எத்தனையெத்தனை கனவுகள் இருந்திருக்கும்!’ என்பது தவறாமல் குறிப்பிடப்படுகிறது. கவிதை நடையில் ‘காற்றில் கரைந்த கனவுகள்’ என்றும்கூட. உணர்வுப்பூர்வமான கூற்று என்றாலும், தொடர்ந்து அதையே ஒலித்துக்கொண்டிருப்பது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. விமான விபத்து மட்டுமல்லாமல், மற்ற அனைத்து விதமான விபத்துகளில் இறந்துபோவோருக்கும் கனவுகள் இருக்கும். உணர்வுப்பூர்வமான கடைசி நேரத்து நிகழ்வுகளும் இருக்கும். அந்த மனிதர்களுக்காக, அவர்களின் கனவுகளுக்காக, நெகிழ்வூட்டிய தருணங்களுக்காகப் பேசவும் நிறைய இருக்கும். ஒரு விமானம் பறக்கிறது என்றால், அது விபத்தில் சிக்குவதற்கென்று குறிப்பிட்ட, குறைந்தபட்ச சாத்தியங்கள் உண்டு என்பதை அனைவருமே அறிவோம். விமான விபத்திற்கான சாத்தியத்தோடு ஒப்பிடும்போது, விமானம் விழுந்து ஒரு மாணவர் விடுதி சிதைவதற்கான சாத்தியம் அரிதினும் அரிது. சற்றும் எதிர்பாராத அப்படியானதொரு விபத்தில் இறந்த வருங்கால மருத்துவர்களின் கனவுகள் குறித்தும், அவர்களின் மரணத்திற்கு முந்தைய சமீப நிகழ்வுகள் குறித்தும் எதுவுமே பேசப்படவில்லை என்பது ஏன் என்று புரியவில்லை. மருத்துவர் ஆக வேண்டுமெனத் தீவிரமாகப் படித்து, நீட் எழுதி தேர்ச்சியடைந்த, எதிர்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள பிள்ளைகளும், மருத்துவர்களும் துளியும் எதிர்பாராத, கற்பனைகூடச் செய்திருக்க முடியாத சூழலில் மாண்டு போயிருக்கின்றனர். ஒரு இழப்பின்போது மனதளவில் ஆதரவு தெரிவிப்பதையும், மரியாதை செலுத்துவதையும் குறைந்த சொற்களிலும் வெளிப்படுத்த முடியும். சொற்கள் இன்றி மௌனத்தில் உணர்ந்துவிட முடியும். அதீதமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டுத்தான் தெரிவிக்க வேண்டும் அல்லது உணர்ந்திட வேண்டும் என்பதில்லை. ~ ஈரோடு கதிர்
❤️ 👍 🙏 😢 🩷 💜 🥹 37

Comments