Erode Kathir
Erode Kathir
June 16, 2025 at 07:37 AM
*தொன்மத்தின் வாசம்* அதிசயமாய் அகப்படுகிறது புழுதிபடிந்த பனையோலை விசிறியொன்று வீசும் விசையினில் திசைமாறி மோதும் காற்றில் என்னை வருடும் இந்த வாசத்தின் பெயர் என்னவாயிருக்கும்? கல்லால் கொட்டி புண்ணுக்கு வைத்த பனைமரத்துச் சாறு; காற்றில் உதிர்ந்து திமிறிக் கிடக்கும் ஓலை; காக்கா முள்ளில் கூட்டல் குறியாய்ச் சிக்கியோடும் காற்றாடி; பதனியும் கள்ளும் போக நொங்காய் விளைந்து கவைக்குச்சி முனையில் ஓடும் வண்டிச் சக்கரம்; முதிர்ந்துதிரும் பழத்தை சுட்டுச் சப்பியபின் அடிநாக்கில் ஆறிக்கிடக்கும் ருசி; பனங்கொட்டையிலிருந்து சீம்பாய் முளைவிட்டு திரண்டு நிற்கும் கிழங்கு; ஒட்டுமொத்தமாய் வீசும் தொன்மத்தின் வாசத்தில் இதுமட்டுமென எதைச் சொல்ல! ~ ஈரோடு கதிர்
❤️ 👍 🩷 🌟 👌 💜 🤍 28

Comments