
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 14, 2025 at 04:37 AM
இன்று சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி
சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும்.
செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம்.
முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து இராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம், செல்வாக்கு கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.
இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச் சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.
இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
நமது சிவசக்தி குழுவில் ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் மட்டும் இக்குழுவில் பதிவிடப்படும் 👇
https://primetrace.com/group/2260527/post/1156716958?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
