Aanthai Reporter News Channel
                                
                            
                            
                    
                                
                                
                                June 19, 2025 at 04:35 AM
                               
                            
                        
                            🦉 இதே ஜூன் 19, ., 🦉
உவமைக்கவிஞர் என்று எல்லோராலும் சிறப்பித்து அழைக்கப்படும் பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று. 😢
தஞ்சை மாவட்டம் சிக்கல் எனும் கிராமத்தில், 1921ம் ஆண்டு திருவேங்கடம் - செண்பகம் அம்மையார் தம்பதிக்கு மகனாய் பிறந்தவர் சுரதா. இயல்பிலேயே தமிழ் மீதான பற்றால் ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார் சுரதா. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றுத் தேர்ந்தவர், பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கும் உதவினார்.
அக்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் சுரதா. யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாத சுரதா, தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றதால், சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் 1955-ல் ‘காவியம்’ என்ற இதழையும் தொடங்கினார். மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். நாணல், நீர்க்குமிழி என திரைப்படங்களில் இவரது கவி வரிகள் சிறந்து விளங்கின. ‘நீர்க்குமிழி’ படத்தில் வரும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல் மனித வாழ்க்கையை துள்ளியமாக விவரித்தது.
1942-ம் ஆண்டுவாக்கில், பாரதிதாசன் இயற்றிய நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்து அசத்திய சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம் என கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாய்த்தவர்.
1944-ல் ‘மங்கையர்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமிழக அரசு, ‘முதன்முதலில்’ ஏற்படுத்திய பாவேந்தர் விருதைப் பெற்றவரும், 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதன்முதலில் ராஜராஜன் விருதைப் பெற்றவரும் சுரதாதான். ‘சாவின் முத்தம்’, ‘சுவரும் சுண்ணாம்பும்’, ‘துறைமுகம்’, என இவரது படைப்புகள் அறியாத பல்கலைக்கழகங்களே இல்லை என்னும் அளவுக்கு உவமைக்கவிஞர் சுரதாவின் படைப்புகளும் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.