Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 01:22 AM
🦉இதே ஜூன் 20 *உலக அகதிகள் தினம்* நம் தமிழ்நாட்டில் திரும்பும் பக்கமெல்லாம் வட இந்தியர்கள்தாம். ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், முடி திருத்தகங்கள், மெட்ரோ ரயில் வேலைகள் என எல்லா இடங்களிலும் அவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்லும்போது ஒரு முறையாவது, ``பாவம் வேலை செய்றதுக்காகச் சொந்த மாநிலத்திலிருந்து இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படுறாங்க" என்று மனதில் நிச்சயம் நினைத்திருப்போம். வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கே இப்படி என்றால், தாய்நாட்டிலிருந்து விரட்டப்பட்டு அல்லது வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களின் நிலை மிகவும் மோசமானது. உலகளவில், நாள்தோறும் சராசரியாக 42,800 பேர் பாதுகாப்பின்மை காரணமாகத் தங்களின் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்கிறது ஐ.நா. அகதிகள் ஆணையம். அவ்வாறு வீடு, உடைமை, சொந்தம், கனவு என அனைத்தையும் தொலைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி வாழும் மக்களுக்கு மனபலமும், நம்பிக்கையும் கொடுக்கும் வகையில் ஜூன் 20- ம் தேதி உலகமெங்கும், `அகதிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. அகதிகள் வெளியேற போர்ச்சூழல், பாதுகாப்பின்மை, பசி, பஞ்சம் போன்றவைதாம் முக்கியக் காரணங்கள். இதுபோக பல நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகிய காரணங்களாலும் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலையும் ஏற்படும். மேலும், உடை கட்டுப்பாடு மற்றும் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளிலிருந்து வெளியேறும் பெண்களையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறது ஐ.நா. சபை. பொதுவாக இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சுற்றுச்சுழல் பிரச்னைகளால் வெளியேறுபவர்கள் அந்நாட்டின் வேறு பகுதிகளில் குடியேறுவார்கள். ஆனால், அது தற்போது மாறி, வேறு நாடுகளுக்குக் குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், கடல்நீர் மட்டம் அதிகரிப்பு, மாசுப் பிரச்னைகள், காலநிலை மாற்றங்கள் ஆகிய சுற்றுச்சூழல் பிரச்னைகளால் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. உலகளவில், சுமார் 9 கோடி மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இதில், 59 சதவிகிதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வருந்தத்தக்கது இந்த நிலையில், நாம் செய்யவேண்டியது என்ன? முதலாவது, அகதிகளை "வேறு மனிதர்கள்" என்று பார்ப்பதை விட்டுவிட்டு, அவர்களும் நம்மைப் போலவே உணர்வுகளுடன் கூடிய உயிர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அனுபவிக்கின்ற வலியை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இரண்டாவது, அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், பாதுகாப்பு – இவை எல்லாம் மனித உரிமைகளே; உதவி அல்ல. மூன்றாவது, அரசாங்கங்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என எல்லோரும் இணைந்து அகதிகளுக்கான ஒரு மனிதமான சூழலை உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, பல நாடுகளில் அகதிகள் சிறைச்சாலைகள் போன்ற முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். இது அவர்களின் உரிமைக்கு மாறானது. மாற்றமாக, அவர்களை சமுதாயத்தில் ஒருபாகமாக ஏற்கும் எண்ணம் வளரவேண்டும்.
Image from Aanthai Reporter News Channel: 🦉இதே ஜூன் 20  *உலக அகதிகள் தினம்*   நம்  தமிழ்நாட்டில்  திரும்பும் பக...

Comments