
Vethathiriya Gnanakkudil
June 8, 2025 at 12:57 AM
*வாழ்க்கை மலர்கள்: ஜூன் 8*
*சினத்தைத் தவிர்ப்போம்*
சினம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆராய்வோம். சினம் எழும்போது என்னென்ன மாறுதல்கள் உடலிலும், உள்ளத்திலும் உண்டாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். சினத்தால் உடலிலே உள்ள உயிர்ச்சக்தி விரைவு கொள்கிறது. குருதி அழுத்தம் ஏற்பட்டு இரத்த வேகம் அதிகரிக்கிறது. கண்கள் சிவக்கின்றன. நரம்புகளில் படபடப்பு ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன. இவ்வாறு பலவிதமான குறிகளைப் பார்க்கின்றோம்.
இதன் விளைவாக உடலிலே பல தொடர் நோய்கள் உண்டாகின்றன. கண்நோய், நாக்குப்புண், வயிற்றுப்புண், மூலம், மலச்சிக்கல் போன்ற பலவாறான நோய்கள் உருவாகச் சினம் ஏதுவாகின்றது. ஏனெனில், சினம் எழும் போது நமது ஜீவகாந்த சக்தி அதிகமாக வெளியேற்றப்பட்டால் அது உடலையும் தாக்கும், மனதையும் கெடுக்கும்.
சினம் என்பது என்ன என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சினமானது எவ்வளவு கொடியது என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலே அனுபவமாகக் கிடைத்திருக்கும். சினம் எழுந்தால் அது பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறது; தன்னையும் அதாவது தன் உடலையும், தன் மனத்தையும் கேடுறச் செய்கிறது. தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்து, தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினமாகும்.
நெருங்கிய நண்பர்களிடத்திலே, சுற்றத்தார்களிடத்திலே, நம்மோடு அன்பு கொண்டு நமது நலத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடத்திலே தான் அதிகமாக அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம். தீமை செய்தார்க்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பாடு உடைய இந்த மனித சமுதாயத்தின் உயர்விலே நல்லது செய்பவர்களுக்கும் தீமை அளிக்கும் ஒரு எண்ண வேகம், உணர்ச்சி வேகம் சினம் என்றால் கட்டாயம் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
2