Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
June 12, 2025 at 01:50 AM
*வாழ்க்கை மலர்கள்: ஜூன் 12* *தியானமும் எண்ணமும்* மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத ஒன்று. ஆகவே தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்தப் பயனையுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்குபடுத்துதல்தான். அவ்வாறு ஒழுங்குபடுத்துதல் என்பது நம் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான். சாதாரணமாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில், உணர்ச்சிவயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மழை நீரானது புவி ஈர்ப்பு விசைக்கேற்றபடி தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். அது வேறு திசையில் செல்ல முயற்சிப்பதில்லை. பழைய அதே பாதையிலேயே செல்வது அதனுடைய தன்மை. மனமும் அது போன்றுதான் செயல்படுகிறது. ஆனால், தியானம் என்பதோ, அதைப் பயின்ற பிறகு மனத்தைப் பழைய வழியில் செல்லாதிருக்குமாறு வைத்துப் பழக்குவதே ஆகும். இந்தத் திறனில் வெற்றி கிட்டச் சில காலம் ஆகும். ஆனால், இடையில் மனந்தளராமலும், முயற்சியைக் கைவிடாமலும் இருக்க வேண்டும். மழைநீரின் வழியை மாற்ற வேண்டுமானால், அதன் ஓட்டத்திற்கு மாற்றுவழி ஒன்று தயார் செய்ய வேண்டும். நீர் முழுவதும் அதில் திரும்புமாறு செய்ய வேண்டும். அதே போல் தொடர்ந்து தியானம் செய்யும்போது, [தாங்கள் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்பாகவே கூட] மனம் நுண்ணிய நிலையை அடைந்து விடுவதால், புதிய பாதையில் திரும்பிவிட மனதினால் முடியும். அந்தப் பாதையிலேயே ஒருமைப்படுத்தவும் முடியும். ஆரம்பப் பயிற்சி அன்பர்கள் நிறையப் பேர் உட்கார்ந்து தவம் செய்யும் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளும் போது, அவர்களின் தவ ஆற்றலும் சேர்ந்து, அந்தக் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளுகின்ற ஆரம்ப சாதகர்களின் ஆற்றலும் சிறிது சிறிதாகப் பெருகி வரும். *- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏 👍 5

Comments