
Vethathiriya Gnanakkudil
June 20, 2025 at 12:33 AM
20-06-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: ஐயா! முற்காலத்தில் தவம் செய்பவர்கள் எல்லாம் எளிதில் சினம் கொள்பவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் தவத்துடன் தற்சோதனை என்ற பயிற்சியை அளித்து ஆன்மீக சரித்திரத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்துள்ளீர்கள். தங்களுக்கு அது தோன்றக் காரணம் என்ன?*
✅ *பதில்:* அதற்குக் காரணம் உள்ளது. நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித்தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லை என்று பிரம்பினால் கைபோனபடி அடித்து விட்டேன்.
அந்தக் குழந்தை பதைபதைத்து அழுதகாட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. “சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்! என்று கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்புநிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகி விட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன்.
“இனிமேல் நீ நன்றாகப் படியப்பா, நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன்” என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மி விட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய்விட்டேன்.
அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப்பிரம்பு, இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டின. இந்தக் கொடுமை நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன்.
என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்படச் செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன்.
அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பிலும் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு "ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள்! ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்து விடும்” என்று தலையில் ஊற்றி விட்டாள். எனக்குத் தாங்க முடியாத குளிர் உணர்ச்சி ஏற்பட்டது. “குளிர் எப்படி இருக்கிறது என்று நீயே பார்” என்று நான் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன்.
அவள் ஒன்றுமே பேசவிலை சிலைபோல் நின்று விட்டாள். புடவை நனைந்து விட்டது. தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்து விட்டுக் கொண்டாள். ஆனால், அவளுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் மனம் புண்படும் வகையில், நான் சினம் கொண்டு அவளிடம் நடந்து கொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன்.
உடனே அவள் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முடிவு செய்தேன், முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்தாக உருவாகியது. தற்சோதனை எனும் உளப் பயிற்சி முறையும் உருவாயிற்று.
வாழ்க வளமுடன்!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
5