Para
June 15, 2025 at 07:00 AM
கடிதம், சிகரம் பாரதி அன்பின் பாராவுக்கு, தமிழகத்தில் நிலை என்னவென்று தெரியவில்லை. இலங்கையில் வழமை என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தேச வழமைச் சட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள். அது தவிர சில இடங்களில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக வழமைக்கு மாறான, வழமைக்கு திரும்பியது, வழமையாக இடம்பெறும் இவ்வாறான முறையில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டேன். ஆனால் இன்று காலை எனது நண்பர் ஒருவருக்கு நான் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் வழமை என்ற சொல்லை குறிப்பிட்டு விட்டேன். ஆகவே இதைப்பற்றி சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன். நான் பணிபுரியும் செய்தி ஊடகத்தில் வழமை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆகவே எனது தனிப்பட்ட பயன்பாட்டிலும் அந்த சொல் இடம்பெறுவதை தவிர்க்க முடியவில்லை. நண்பருக்கு அனுப்ப தயாராக இருந்த நிலையில், அதை அவதானித்து "இயல்பாக" என்று மாற்றி அனுப்பினேன். பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும் இந்த சொல் பயன்பாட்டில் இருப்பதால் தான் அதன் மாற்றுச் சொல் அல்லது சரியான சொல் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. வழமை என்பதை இயல்பு என்று பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இயல்பு என்பதும் பயன்படுத்த இலகுவான சொல்தான். எனது தனிப்பட்ட பயன்பாட்டில் இயல்பான என்ற சொல்லை பயன்படுத்த முயற்சிக்கிறேன். முயற்சிக்கிறேன் என்று சொல்லக் காரணம், தொழிலில் நான் தீர்மானித்து அதை நீக்கிவிட முடியாது என்பதால் தான். தங்கள் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி ஆசானே. சிகரம் பாரதி. --- இலங்கைத் தமிழில் வழமை உண்டு என்பதைக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேனே. உங்களுக்குத் தள்ளுபடி. நீங்கள் வழமைபோல எழுதுங்கள். பாரா
🏃 🤔 2

Comments