Para
June 19, 2025 at 09:01 AM
அன்பின் பா.ரா. அவர்களுக்கு வணக்கம் மன்னர் மிர் அஹ்மத்யார் கான் தன்னை ஒரு அப்பாவியாக நிரூபித்துக் கொண்டேயிருந்திருக்கிறார். போட்டு வைத்த திட்டங்களில் முதல் இரண்டும் கதைக்குதவாது என்று அவருக்கே தெரிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானுடன் சேரலாம் அதுவும் சரிவராத வேளையில் பாகிஸ்தானுடன் பேரம் பேசி அவர்கள் ஆளுமைக்குள் தனது முடியாட்சி அந்தஸ்தை தக்க வைக்கப் பார்ப்பது. கடைசியில் ஒரு வழிப் பாதையில் மாட்டிக் கொண்டதைப் போல சேர்ந்தால் பாகிஸ்தானுடன்தான் சேர வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஜின்னா தான் நினைத்தபடி பாகிஸ்தானை பிரித்து வாங்கியதோடு மட்டுமில்லாமல் அங்கு கவர்னர் ஜெனரலாகவும் ஆகிவிட்டார். சமஸ்தானங்களை இணைக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார். கான் பழைய நண்பராகிவிட்டார். பிரிட்டிஷார் பலூசிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப்பகுதியாக வைத்திருக்கவில்லை. இதுவே கலாட் மன்னருக்கு பெரிய பிரச்சினை. கடைசியில் பலூசிஸ்தானை ஒன்று இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன்தான் இணைத்தாக வேண்டும். ஆனால் பலூசிஸ்தான் இந்திய சமஸ்தானங்களைச் சேர்ந்தது அல்ல. ஆகையால் இந்தியாவுடன் இணைய வாய்ப்பே இல்லை. இப்போது மற்ற சமஸ்தானங்களை பாகிஸ்தானுடன் இணைக்க நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கும் போது காஷ்மீர் அவரை இழுக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆங்காங்கே சமஸ்தானங்களை பெரிய பிரச்சினைகள் இல்லாமல் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். அதற்கு புவியியல் அமைப்பும் காரணம். ஆனால் காஷ்மீர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அமைந்துவிட்டதே! காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்த பக்கம் யாரும் வரக்கூடாது. எங்கள் நாடு. எம் மக்கள்.எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியமாக கூறிவிட்டார். இவ்வளவுக்கும் காஷ்மீரில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையினர். மக்கள் அவரை நம்பினர். ஆனால் கலாட் மன்னருக்கு ஏன் அந்த தைரியம் வரவில்லை? பாவம் அவர் ஜின்னாவை நம்பிவிட்டார். இந்திய பகுதியில் முஸ்லீம் பெரும்பான்மையாக வசிக்கும் ஜுனாகத், ஹைதராபாத் இரண்டையும் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள விரும்பினாலும் அவை இந்தியாவுடன்தான் இணையும் என்பதை புரிந்து கொண்டார் ஜின்னா. அவருடைய நீண்டகால திட்டம் பலூசிஸ்தான். அதுவும் கலாட் மன்னர் ஜின்னா மேல் கொண்ட அளவற்ற அன்பினால் வந்த வினை. இல்லையென்றால் ஜின்னா ஏன் பலூசிஸ்தான் பக்கம் வருகிறார். பாகிஸ்தானை பிரித்து வாங்கிக் கொண்டதும் நாட்டின் பரப்பளவை அதிகப்படுத்த பலூசிஸ்தான் பரப்பளவும் வசிக்கும் முஸ்லிம் மக்களும் அவருக்குத் தேவை. பலூசிஸ்தானுக்கு அடுத்து ஜின்னாவின் பார்வை காஷ்மீர் பக்கம் விழுந்துவிட்டது. சட்டம் படித்தவர் சட்ட நுணுக்கங்களை பிரித்து ஆராய்ந்தவர் நமக்கு நிச்சயம் நல்லதுதான் செய்வார் என்று நம்பிய கலாட் மன்னருக்கு சட்டத்தைப் பயன்படுத்தி ஜின்னா என்ன செய்தார்? என்ன செய்திருப்பார் என்று தெரியும். எப்படி செய்தார்? பார்ப்போம் . பாபநாசம் நடராஜன்

Comments