நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
June 11, 2025 at 07:19 AM
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! என்ற தம் உணர்ச்சி மிக்க பாடல் வரிகளால் இன உணர்ச்சியையும் மான உணர்ச்சியையும் தட்டி எழுப்பி தமிழர் மனங்களில் எழுச்சியை ஏற்படுத்திய புரட்சிப்புலவர்..! பழந்தமிழ் நாட்டில் பைந்தமிழ் மொழியில் படிப்பதுதானே முறை? இழந்தநம் உரிமை எய்திடத் தடுக்கும் இழிஞரின் செவிபட, அறை! கனித்தமிழ் நிலத்தில் கண்ணெனுந் தமிழில் கற்பது தானே சரி! தனித்தமிழ் மொழியைத் தாழ்த்திய பகையைத் தணலிட் டே, உடன் எரி, என்று தாய்த்தமிழ்வழி கற்றலைத் தடுக்க முனைந்த சதிகாரர்களின் அதிகாரத்தை வரிகளால் எரித்த கவிநெருப்பு! 'தென்மொழி' இதழ் மூலம் உலகின் தொன்மொழி தமிழின் வன்மையை எடுத்தியம்பிய பெருந்தகை..! இந்தி திணிப்புக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திய மொழிப்போர் மறவர்..! ஈழத்தாயக விடுதலைக்குக் குரல் கொடுத்து சிறை கண்ட இனமானப்போராளி! நாற்பதுக்கும் மேற்பட்ட தனித்தமிழ் நூல்கள் இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி சேர்த்த தமிழ்த்தாயின் தலைமகன்..! என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்! என்று தடம் மாறாது வாழ்ந்த தன்மானத்தமிழன்..! "தமிழர்க்குத் திராவிடம் என்பதோ அயன்மை! தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை! தமிழர்க்குத் தமிழமே பொருந்திடும் இயன்மை! தமிழ்த்தேசியமே என்றும் பேருண்மை" என்று உலகத்தமிழர்க்கு உரத்து உரைத்த பெருந்தமிழர்..! இனப்பகைவர்க்கு எதிராக அறம் பாடிய மறத்தமிழர்..! எங்கள் தாத்தா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரும்புகழ் போற்றுவோம்! வைகாசி 28 | 11-06-2025 https://x.com/Seeman4TN/status/1932694082838802632 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
❤️ 🙏 2

Comments