Sammil Majeed
Sammil Majeed
June 11, 2025 at 08:50 AM
https://www.facebook.com/share/p/1F1YtEGHdW/ இமாம் அலீ இப்னு மூசா அர்ரிழா (றஹ்) அவர்களிடம் ஓர் இறைமறுப்பாளர் வந்தார். அந்நேரம் இமாமவர்களோடு ஒரு சிறு கூட்டத்தாரும் இருந்தார்கள். இமாமவர்கள் அந்த இறைமறுப்பாளரிடம் கேட்டார்கள்: "நாங்களும் நீங்களும் சமமானவர்களா? உங்கள் நம்பிக்கை சரியாக இருந்து எங்கள் நம்பிக்கை பிழையாகிப்போனால் நாங்கள் தொழுதவையும், நோன்பு நோற்றவையும், ஸகாத் கொடுத்தவையும், நம்பிக்கை கொண்டு ஆமோதித்தவையும் எங்களுக்கு ஏதாவது தீங்கிழைக்குமா?" இறைமறுப்பாளர் அமைதியாக இருந்தார்.மேலும் இமாமவர்கள் கேட்டார்கள்: "ஆனால், எங்கள் நம்பிக்கை சரியாக இருந்து உங்கள் நம்பிக்கை பிழையாகிப்போனால், நீங்கள் அழிவில் உள்ளீர்கள். நாங்கள் வெற்றியடைந்த கூட்டமாக ஆகிவிடுவோமே?" அந்த மனிதர் கூறினார்: "இறைவன் உமக்கு அருள்புரியட்டும்! இறைவன் எவ்வாறு, எங்குள்ளான் என்பதை எனக்கு நீங்கள் புரியவையுங்கள்?" அதற்கு இமாமவர்கள் "உமக்குக் கைசேதமே! நீர் பின்தொடரும் சிந்தனை பிழையானது. இறைவன் சடப்பொருட்களைப் படைத்து, அவற்றுக்கு இடத்தை வழங்கியுள்ளான். ஆனால், அவனுக்கு இடமில்லை. 'எவ்வாறானது' என்ற குணநலன்களை அவனே உருவாக்கியவன்; அவனில் 'எவ்வாறானது' என்ற குணநலன் இல்லை. அவனை எங்குள்ளான், எவ்வாறுள்ளான் என்பதை வைத்து அறிய முடியாது. அவனை எந்த ஓர் உணர்வும் அறிந்துகொள்ளாது. அவனை எதனோடும் ஒப்பிடவும் முடியாது!" என்றார்கள். அப்போது அந்த மனிதர் "எதனோடும் ஒப்பிடவும் முடியாமல், எந்த உணர்வாலும் அறிய முடியாவிடின், அது இல்லை என்பதே யதார்த்தமாகும்" என்றார். இமாம் ரிழா (றஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "அந்தோ பரிதாபம்! உமது உணர்வுகள் அவனை உணரும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாய் நீர் அவனை மறுக்கிறீர். ஆனால், எங்கள் உணர்வுகள் அவனை அறியும் சக்தியை இழந்திருக்கிறது என்பதாலேயே அவன் எங்கள் இரட்சகன். எமது புலன்களால் அறிந்துகொள்ளும் அனைத்திற்கும் முரணானவன் அவன்." இறைமறுப்பாளர் இமாமிடம் "அவன் எப்போது இருந்தான் என்று கூறுங்கள்?" என்றார். அதற்கு இமாமவர்கள் "அவன் எப்போது இல்லாமல் இருந்தான் என்று கூறுங்கள், நான் அவன் எப்போது இருந்தான் எனக் கூறுகிறேன்" என்றார்கள். அம்மனிதர் "அவனது உள்ளமைக்கான ஆதாரம் என்ன?" எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள் "நான் எனது உடலைப் பார்க்கிறேன், அதன் உயர, அகலத்தில் என்னால் கூட்டலோ குறைத்தலோ செய்ய முடியாது. மேலும், அனைத்து தீங்குகளை அதைவிட்டும் தூரமாக்கவோ, அனைத்து நன்மைகளை அதன்பால் ஈர்க்கவோ நான் சக்தியற்றவன். எனவே, இக்கட்டமைப்புள்ள உடல் ஓர் படைப்பாளனைக் கொண்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன்; அவனை ஏற்றுக்கொண்டேன். இப்பிரபஞ்சம் அவனது ஆற்றலினால் சுழல்கிறது என்பதைப் பார்க்கிறேன். மேகங்களைத் தோற்றுவிப்பதும், காற்றினை வீசச் செய்வதும், சூரிய-சந்திரன், நட்சத்திரங்களை இயங்கவைப்பதும் அவனது தெளிவான அத்தாட்சிகளில் உள்ளது என்பதையும் பார்க்கிறேன். இவை அனைத்தும் ஒழுங்குமுறையில் இயங்குவதற்கு ஓர் படைப்பாளனும், ஓர் ஒழுங்கமைப்பாளனும் இருக்கிறான் என்பதை அறிந்துகொண்டேன்" என்றார்கள். [குறிப்பு: இமாம் அலீ இப்னு மூசா அர்ரிழா (றஹ்), இமாம் ஹுசைனின் கொள்ளுப் பேரரான இமாம் ஜஅஃபர் ஸாதிக்கின் பேரர் ஆவார். இஸ்னா அஷர் (பன்னிருவர்) ஷீஆக்களுக்கு இவர் எட்டாவது இமாம் ஆவார்.] அல்ஃகாபீ: பாகம் 01, பக்.78 ** Join my WhatsApp channel 👇 https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️ 👍 14

Comments